வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (05/12/2018)

கடைசி தொடர்பு:08:23 (05/12/2018)

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று!

மறைந்த, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள், இன்று அனுசரிக்கப்படுகிறது.

ஜெயலலிதா

தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர்; நாடாளுமன்ற உறுப்பினர்; 5 முறை தமிழக முதல்வர் என அரசியல் உலகில் ஆதிக்கம் செலுத்திவந்தவர் ஜெயலலிதா. திரையுலகில் தன் வாழ்க்கைப்பயணத்தைத் தொடங்கியவர்,  மொத்தம் 115 படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் நடித்துள்ளார். திரையுலகில் கொடிக்கடிப்பறந்த ஜெயலலிதாவை கைப்பிடித்து அரசியலுக்கு கொண்டுவந்து, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்து அழகுபார்த்தவர் எம்.ஜி.ஆர். அவர் மறைவுக்குப் பிறகு, 1991-ம் ஆண்டு முதன்முறையாக தமிழக முதல்வராகப் பதவி ஏற்றார். 5முறை தமிழக முதல்வராக இருந்த அவர், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி, உயிரிழந்தார். இந்நிலையில், அவரது இரண்டாம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

பேனர்

அதனால், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க தொண்டர்கள் எனப் பலர் அஞ்சலிசெலுத்த இருக்கின்றனர். அவர்களை வரவேற்க, இரவோடு இரவாக தீவிரப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை அண்ணா சாலையிலிருந்து வாலஜா சாலை பிரியும் இடத்திலிருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை, வழி நெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. சிறு சிறு பேனர்கள் தயாரிக்கும் வேலைகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சுமார்        50-க்கும் மேற்பட்ட போலீஸார் இரவுப் பணியில் திருவல்லிக்கேணி வீதிகள்,வாலாஜா சாலை, காமராஜர் சாலை, நினைவிடம் என ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஜெயலலிதா

ஆங்காங்கே தற்காலிக நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு முன்னால் மேடை அமைக்கப்பட்டுள்ளது. நினைவிடத்திற்கு வரும் அனைத்து வாயில்களும் மூடிவைக்கப்பட்டுள்ளன. வெளியே பெரிய பேனர்கள் கட்டும் பணிகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ’இரண்டாம் ஆண்டு நினைவு தினம்’ என சாலைகளில் வரையப்பட்டு வருகிறது. இப்படிப் பல பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.