‘சிம்மக் குரலில் என்னை அழைக்க மாட்டாயா?’ - ஜெ., நினைவு நாளில் பூங்குன்றன் உருக்கம் | poongundran Tribute to jayalalitha

வெளியிடப்பட்ட நேரம்: 08:43 (05/12/2018)

கடைசி தொடர்பு:08:56 (05/12/2018)

‘சிம்மக் குரலில் என்னை அழைக்க மாட்டாயா?’ - ஜெ., நினைவு நாளில் பூங்குன்றன் உருக்கம்

ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில், அவருக்கு உதவியாளராக இருந்த பூங்குன்றன் மிகவும் உருக்கமாக  அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். 

ஜெயலலிதா - பூங்குன்றன்

தமிழகத்தின் மிகப்பெரும் பெண் ஆளுமை, முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், 5 முறை தமிழக முதல்வர் என ஆதிக்கம் செலுத்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். இன்று, அவரது இரண்டாம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. ஜெயலலிதாவின் நினைவு நாளில் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அவருக்கு அஞ்சலிசெலுத்தப்பட்டுவருகிறது. 

ஜெயலலிதா

இதற்கிடையில், ஜெயலலிதாவிடம் நீண்ட நாள்களாக உதவியாளராகப் பணியாற்றிய பூங்குன்றன், அவரது இரண்டாம் ஆண்டு நினைவுநாளில் பாடல் பாடி அவருக்கு அஞ்சலிசெலுத்தியுள்ளார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. வீடியோவில், ஜெயலலிதாவைப் புகழும்படியான பாடலுடன் தொடங்குகிறார் பூங்குன்றன்.

பூங்குன்றன்

அதன் தொடர்ச்சியாக, “எங்கள் இதய தெய்வம் நீ, தெய்வம் என்பதனாலேயே சோதிக்காதே தாயே, தாயில்லா வேதனையைக் கற்றுக்கொண்டோம். போதும் அம்மா திரும்பி வா. இரண்டு ஆண்டுகள் கழிந்தாலும் ஏனோ கண்ணீர் மட்டும் நிற்கவில்லை. எங்களின் கண்ணீர் துடைக்க நீ வரமாட்டாயோ. அம்மா அம்மா என்று நாங்கள் பெற்ற தாயைக் கூப்பிட்டோமா தெரியவில்லை. ஆனால், உன்னைத் தானே அழைத்தோம். இந்தப் பிள்ளைகளைப் பார்க்க நீ வரமாட்டாயா, பரிதவிக்கும் தொண்டர்களைப் பாரம்மா. அவர்கள்தான் என் உயிர் என்பாயே, அவர்களின் வேதனையைப் போக்க வரமாட்டாயா. நீ இருக்கிறாய் என்பதாலேயே பெண்கள் பயமின்றி வாழ்ந்தனர். அவர்களின் பயம் போக்க வரமாட்டாயா? மக்களால் நான், மக்களுக்காகவே நான் எனக் கூறுவாயே ...தற்போது மக்களின் இருள் களைய வரமாட்டாயா. புரட்சித் தலைவரின் பொற்கால ஆட்சியைத் தரமாட்டாயா. அம்மா, நீ போனபோதே தமிழகத்தின் கம்பீரமும் போனதே. நேற்று உன்னுடன் நான் இருந்ததால் எனக்கு அரசியலில் மரியாதை. இன்று தெய்வமாகிவிட்டதால் எனக்கு ஆன்மிகத்தில் மரியாதை ஆக நீ என்னுடன் இருக்கிறாய் என்றே பயணிக்கிறேன். உன்னுடைய சிம்மக் குரலில், 'பூங்குன்றன்' என்று அழைக்க மாட்டாயா? கனவிலாவது கூப்பிடம்மா ஆறுதல் கொள்கிறேன். நேற்று இருந்தாய் இன்று இல்லை. நாளை வருவாய் எனக் காத்திருக்கிறோம்” எனப் பேசியுள்ளார்.