வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (05/12/2018)

கடைசி தொடர்பு:09:50 (05/12/2018)

மேக்கே தாட்டூ அணை விவகாரம்! - நாளை கூடுகிறது தமிழக சட்டசபை

மேக்கே தாட்டூ விவகாரம் தொடர்பாக விவாதிக்க, நாளை தமிழக சட்டசபையில் சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. 

சட்டசபை

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே, மேக்கே தாட்டூ என்ற இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வளத் துறையிடம் தாக்கல்செய்து, புதிய அணை கட்ட ஒப்புதல் வழங்கும்படி கோரியுள்ளது கர்நாடக அரசு.  கர்நாடகாவின் இந்த கோரிக்கையை ஆய்வுசெய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது தமிழகத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்து, தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றன.

இதற்கிடையில், மேக்கே தாட்டூ அணை விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த, உடனடியாக தமிழக சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும் என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதன்படி, தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம் கூடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. 

முன்னதாக, சட்டசபைக் கூட்ட அனுமதி கோரி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு சபாநாயகர் தனபால் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்துக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், கூட்டம் நடைபெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சட்டசபை செயலாளர் சீனிவாசன். அதில், “ தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவின்படி, நாளை டிசம்பர் 6 -ம் தேதி மாலை  4 மணிக்கு சட்டசபைக் கூட்டம் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, அனைத்து சட்டசபை உறுப்பினர்களுக்கும் இ-மெயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை நடைபெற உள்ள சட்டசபை சிறப்புக் கூட்டத்தில், மேக்கே தாட்டூ அணை தொடர்பாக சில முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஸ்டாலின்

இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், “ மேகதாதுவின் அணை கட்டக் கூடாது என்பதை வலியுறுத்தி, எதிர்க்கட்சிகளின் சார்பில் மிகப் பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாளை மாலை சிறப்பு சட்டசபைக் கூட்டம் கூட்டப்படுவது வரவேற்கத்தக்கது. இந்தக் கூட்டத்தில், அரசு முன்வைக்கும் தீர்மானத்தைப் பொறுத்து எங்கள் கோரிக்கை இருக்கும். சில தினங்களுக்கு முன்புகூட தஞ்சை, திருவாரூர் பகுதியில் நான் சென்றுபார்த்தேன். அங்கு இன்னும் புயல் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் மக்கள் தவித்துவருகின்றனர். நாட்டிற்கே படி அளந்துகொண்டிருந்த டெல்டா மக்கள், இன்று சோற்றுக்குக்கூட வழியில்லாமல் நிற்கின்றனர். புயல் நிவாரணமாக மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ள நிதியுதவி, அப்படியே பொதுமக்களிடம் சென்று சேரவேண்டும் என்பதே அனைத்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது. எந்தச் சூழலில் தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள தி.மு.க தயாராக உள்ளது” என்றார்.