வெளியிடப்பட்ட நேரம்: 10:52 (05/12/2018)

கடைசி தொடர்பு:10:52 (05/12/2018)

வயலுக்குள் புகும் யானைகளை விரட்ட தேனடை வேலி... வழிசொல்லும் ஆசிரியர்!

யானைகள் மற்றும் மனிதர்களின் மோதலைத் தடுப்பதற்காக இயற்கையோடு இணைந்த ஒரு தீர்வை முன்வைக்கிறார் கரூர் ஆசிரியர் ஒருவர்.

வயலுக்குள் புகும் யானைகளை விரட்ட தேனடை வேலி... வழிசொல்லும் ஆசிரியர்!

``காட்டுக்குள்ளிருந்து வந்த யானைகள் பயிர்களை அழித்தன", ``யானை தாக்கி ஒருவர் மரணம்", ``வழிதவறி வந்த யானை மின்சாரவேலியில் சிக்கி பலி" போன்ற செய்திகளை அடிக்கடி ஊடகங்களில் பார்க்கமுடியும். அந்தளவுக்கு, மனிதர்களாகிய நாம் முன்னேற்றம் என்ற பெயரில் காடுகளை அழித்து சிதைத்ததால், காடுகளில் வழி மாறி குடியிருப்புப் பகுதிகளுக்குள் யானைகள் புகுந்துவிடும் அவலம் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், யானைகள் மீது மட்டும் இந்தச் சம்பவங்களுக்கு எப்போதும் பழிபோட்டுவிட்டு நாம் தப்பித்துக்கொள்கிறோம். இந்நிலையில், யானைகள் காட்டுக்குள்ளிருந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும், விவசாயிகள் பயிர் செய்துள்ள வயல் பகுதிகளுக்குள்ளும் வராமல் தடுக்க கரூரைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் ஒரு வழிமுறையை முன்வைக்கிறார். ஏற்கெனவே ஆப்பிரிக்க காடுகளில் அங்குள்ள விவசாயிகள் செய்திருக்கும் யானைகள் தடுப்பு வழிமுறைதான் அது. அதாவது, விவசாயிகள் தங்கள் வயல் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தேனீக்களை வளர்க்கும் பெட்டிகளை அங்கங்கே வைத்துவிட்டால், தேனீக்களுக்கு பயந்து யானைகள் வராது என்கிறார் அந்த ஆசிரியர்.

கரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஆசிரியராக இருக்கும் ராஜசேகரன்தான் அவர். அந்தப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவிகளான சன்மதி, சுருதி ஆகிய இரண்டு மாணவிகளோடு ஆசிரியர் ராஜசேகரன் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு - 2018-ல் பங்கேற்பதற்காக ஓர் ஆய்வினை மேற்கொண்டிருக்கிறார். மலைப்பகுதிகளின் அடிவாரங்களில் உள்ள பாதிக்கப்பட்ட பல விவசாயிகளைச் சந்தித்து ஆலோசனை கேட்டிருக்கிறார். ஆய்வின் முடிவில்தான், `யானைகளை விரட்ட இந்தத் தேனீப்பெட்டி அல்லது தேனடை வேலி சிறந்தது. குறிப்பாக தமிழகப் பகுதிகளுக்கு உகந்தது' என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

 தேனிப்பெட்டி வேலி

ஆசிரியர் ராஜசேகரனிடம் பேசினோம். ``காடுகளை அழிப்பதால், அங்கே வசிக்கும் பல உயிர்கள் அழிகின்றன. இதனால்,இயற்கை சமநிலை மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் சிதைகிறது. காடுகளில் வழிமாறும் யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைகிறது. அங்கு விவசாயிகளைத் தாக்குகிறது; பயிர்களை அழிக்கிறது. இல்லையென்றால், விவசாயிகள் பாதுகாப்புக்காக வயல்களைச் சுற்றிப் போட்டு வைத்திருக்கும் மின்சார வேலிகளில் சிக்கி இறக்கிறது. இதற்கு காரணம் நாம்தாம். தமிழ்நாட்டில் கோவை, ஊட்டி, ஈரோடு, திண்டுக்கல், கொடைக்கானல், தர்மபுரி, ஒசூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைகள் மற்றும் காடுகளையொட்டியுள்ள பகுதிகளில் வாழும் விவசாயிகளின் மிகப்பெரிய பிரச்னையாக யானை ஊடுருவல் இருக்கிறது. இதற்காக அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியையே சந்தித்து வருகின்றன என்றும் கூறுகின்றனர்.

அதோடு, கடந்த மூன்று ஆண்டுகளில் உணவு, குடிநீர் தேடி வலசை வந்த யானைகளால் இந்தியாவில் கொல்லப்பட்டவர்கள் 1052 பேர். இந்தியாவில் ஆண்டுதோறும் 100 முதல் 300 பேர் வரை யானைகளால் தாக்கப்பட்டு இறக்கின்றனர். 2012-13 காலத்தில் 18 மாநிலங்களில் வனவிலங்குகள்-மனிதர்கள் இடையிலான மோதல் எண்ணிக்கை 78,656. யானைகளால் மட்டும் ஆண்டுதோறும் 8 லட்சம் முதல் 10 லட்சம் ஹெக்டேர் வரையிலான நிலங்களில் கரும்பு, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் அழிகின்றன. அதேபோல், பொள்ளாச்சி மற்றும் தமிழக வனப்பகுதிகளில் பல்வேறு காரணங்களால் கடந்த 17 ஆண்டுகளில் 1299 யானைகள் உயிரிழந்துள்ளன. இப்படி மனிதர்களால் யானைகளுக்கும், யானைகளால் மனிதர்களுக்கும், குறிப்பாக தமிழக வனப்பகுதிகளையொட்டியுள்ள விவசாயிகளுக்கும் பரஸ்பர பிரச்னைகள் ஏற்படுகின்றன. இப்படித் தமிழக வனப்பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் யானைத் தாக்குதலிலிருந்து தங்களையும், தங்கள் பயிர்களையும் காப்பாற்றுவதற்காக நாங்கள் ஓர் இயற்கை முறையிலான நிரந்தரத் தீர்வினை இந்த ஆய்வின் மூலம் கண்டறிந்தோம். அது ஏற்கெனவே ஆப்பிரிக்க காடுகளில் அங்குள்ள விவசாயிகள் செயல்படுத்தும் தடுப்பு முறைதான்.

 மாணவிகள் சன்மதி மற்றும் சுருதியோடு ராஜசேகரன்

யானைகள் விவசாயப் பயிர்களை சூறையாடுவது என்பது பயிர்களுக்கு நிகழும் மிகப்பெரிய இழப்பு. தமிழ்நாட்டில் மிக வேகமாகவும், அதிகமாகவும் பரவிவரும் யானைகளைத் துரத்தும் முறை, வயல்களைச் சுற்றி மின்வேலிகள் அமைப்பதுதான். ஆனால், இது யானைகளைத் துரத்துவதில்லை. மாறாக யானைகளைக் கொல்கிறது. இதைத்தவிர, அச்சூழலில் நிகழும் மிகப்பெரிய போராட்டம் மனித-விலங்கு மோதல். இதில் ஒன்று மனிதர்களால் எதிர்க்கப்படும் யானை கொல்லப்படுகிறது. இல்லையெனில், மனிதர்களை யானை கொன்றுவிடுகிறது. எனவே, தமிழகத்தில் இது கவனம் செலுத்த வேண்டிய பிரச்னையாக மாறியுள்ளது. இத்தகைய பிரச்னைக்காக தமிழகத்தில் பயன்படுத்தப்படும் மிகவும் ஆபத்தான முறையே மின்வேலிகள். தங்கள் வயல்களைச் சுற்றி மின்வேலிகள் அமைப்பது யானைகளுக்கு மட்டுமல்ல, அறியாமல் அதைத் தொடும் மனிதர்களுக்கு, குழந்தைகளுக்கு மற்றும் பல உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும். ஆகவே, இது பயன்படுத்தத்தக்க சரியான முறை அல்ல.

யானைகள் மிகவும் புத்திசாலித்தனமானவை. தினமும் 25 முதல் 200 கிலோ மீட்டர் வரை நடக்கும் வலிமை உடையது. காடுகளை பாதுகாப்பதிலும், பரப்புவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இலை தழைகளை உண்டு தனது சாணத்தின் மூலமும், தனது மிகப்பெரிய உடலின் மூலமும் விதைப்பரப்பு முறையைச் சிறப்பாகச் செய்கின்றன. எனவே, காடுகள் பெருக யானைகள் மிகவும் முக்கியமானவை. இதனால், காடுகளில் பல்லுயிர்ப்பெருக்கம் தானாகவே நடைபெற யானைகள் வழிவகை செய்கின்றன. யானைகள் நடந்துகொண்டே இருக்கும். இவ்வாறு நடக்கும்போது இலை தழைகளை உண்டு பல கிலோ மீட்டர் தொலைவில் சென்று கழிவுகள் மூலம் அவற்றை வெளியேற்றுகின்றன. இவற்றில் உள்ள விதைகள் மண்ணுக்குள் சென்றுவிடும். பின்னர், மழை பெய்யும்போது அவ்விதைகள் முளைத்து வளருகின்றன. இவ்வாறே காடுகள் உருவாகின்றன. ஒரு யானை ஒரு நாளைக்கு 200 லிட்டர் தண்ணீர் குடிக்கும். யானை ஒரு நாளைக்கு 150 கிலோ இலை தழைகளை உண்ணும். இவை கிடைக்கும் இடங்களையும் நன்றாக அறிந்து வைத்திருக்கும். எனவே, அதைப் பின்தொடர்ந்து வரும் உயிரினங்களுக்கும் உணவு கிடைக்கும்.

 தேனடை வேலி

இனப்பெருக்கக் காலத்தில் 18 கி.மீ சுற்றியுள்ள மற்ற யானைகளுடன் இணையும். ஒரு குழுவில் கிட்டத்தட்ட 22 யானைகள் இருக்கும். வறட்சிக் காலங்களில் 4 குழுக்களாகப் பிரியும். தனித்தனியாகத் தண்ணீர், உணவைத் தேடும். மழைக்காலங்களில மறுபடியும் இணையும். ஒரு யானையை நாம் தாக்கினால், அது நம்மை உடனே திருப்பித் தாக்காது. ஆனால், 4-5 ஆண்டுகள் ஆனாலும் அதை மறக்காது. தனியாக மாட்டிக்கொண்டால் நம்மைத் தாக்கி விடும். யானைகளைக் கொல்லுவதோ அல்லது தொந்தரவு செய்வதோ சட்டப்படி குற்றம். ஆகவே, மின்வேலிகள் அமைப்பது மிகவும் ஆபத்து. இதைத்தவிரப் பட்டாசுகள் வெடிப்பது, குழிதோண்டுதல் போன்ற தற்காலிக வழிகளும் தவறே. ஆகவே, நாம் நிரந்தரமான யானைகளைத் துன்புறுத்தாத விவசாயிகளுக்குப் பயனளிக்கும் தடுப்பு முறையை மேற்கொள்வது அவசியம். அப்படித் தமிழக வனச்சூழலுக்கு ஏற்ற தடுப்பு முறைதான் தேனடை வேலிகள். ஆப்பிரிக்கக் காடுகளில் அங்குள்ள விவசாயிகள் அமைத்திருக்கும் யானைத் தடுப்பு முறைதாம் இது. இந்தப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வே தேனடை வேலிகள்தாம். 

``யானைகள் இயற்கையாகவே தேன்கூடுகள், தேனீக்கள் இருக்கும் காட்டுப் பகுதிக்குச் செல்லாது" என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே, இது ஓர் இயற்கை வழியாக இருக்கும். ஆனால், தேனீக்கள் யானைகளையோ, மனிதர்களையோ கடிக்காது. யானைகளால் 6 மீட்டர் தொலைவிலேயே தேனீக்களின் சத்தத்தை உணர முடியும். மீறினாலும் வேலியின் கம்பியை அசைத்தால் தேனீக்கள் எழுப்பும் ஒலி யானைகளை விரட்டிவிடும். இது யானைகளைப் பாதிக்காது. எனவே இது பயன்படுத்தத் தக்கது. பக்க விளைவுகள் இல்லாத ஆபத்து விளைவிக்காத இயற்கை தடுப்பு முறை. இந்தத் தேன்கூடு வேலிகள் ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வரும் வெற்றி வழிமுறையே. இதைப் பயன்படுத்துவது மூலம் யானைகள் வராமல் தடுக்கப்படுவது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் விவசாயிகளுக்குச் சுத்தமான தேனும் கிடைக்கிறது. இது ஏழை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வைக்கும். இது மிகவும் விலை உயர்ந்த செய்முறையும் அல்ல. விவசாயிகளால் எளிதில் அமைக்கக்கூடிய வேலிகளே. இது இந்தப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக நிச்சயம் இருக்கும். இது தேனீக்களின் இனப்பெருக்கத்திலும் உதவுகிறது. இந்த உலகில் தேனீக்கள் இல்லையென்றால் மனிதர்களால் 4 வருடத்துக்கு மேல் வாழ முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள் அறிவியல் வல்லுநர்கள். இந்த உலகில் 80 சதவிகித உணவு உற்பத்திக்குக் காரணமாக இருப்பது தேனீக்களே. தேனீக்கள் தற்போது அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்தத் தேனடை வேலி அமைப்பதன் மூலம் தேனீக்களும் அழியாமல் காக்கப்படும். 

 விளைநிலங்களை நோக்கி வரும் யானை

எங்கள் ஆய்வின் நோக்கம் யானைகளைக் காப்பாற்றுவது, தமிழக வனப்பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளுக்கு உதவுவது, மறைமுகமாக தேனீக்களின் இனப்பெருக்கத்தில் பங்கு வகிப்பது உள்ளிட்டவைதாம். தேன் சேகரிக்கும் போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்தம் அடுத்தடுத்து பூக்களின் மேல் தொற்றிக் கொள்ளும். இதனால், மகரந்தச்சேர்க்கை சிறப்பாக நடக்கும். விளைச்சலும் அமோகமாக இருக்கும். ஆனால், நாம் பயன்படுத்தும் செயற்கை உரத்தில் உள்ள நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள் தேனீக்களின் அழிவுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. யானைகளின் அழிவு காடுகளின் அழிவு. தேனீக்களின் அழிவு ஒட்டுமொத்த மனித இனத்தின் அழிவு. எனவே, இந்த அனைத்துச் சிக்கல்களுக்கும் இந்தத் தேன்கூடு வேலிகள் ஒரு நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் ஐயமில்லை. தமிழக வனப்பகுதி விவசாயிகளுக்கு இந்தத் தேனடை வேலிகள் அமைத்து யானைகளைத் தடுப்பது நல்ல தீர்வாக அமையும். அங்கு நாங்கள் சந்தித்த விவசாயிகளும் இந்த வழிமுறையை ஏற்கிறார்கள். ஆனால், தமிழக அரசும், வனத்துறையும் இந்த முறை பற்றி தேவையான விழிப்புஉணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் சமீபமாக அதிகரித்திருக்கும் யானை-மனிதர்கள் மோதலை முற்றிலும் தடுக்க முடியும்" என்றார் அழுத்தமாக.


டிரெண்டிங் @ விகடன்