வெளியிடப்பட்ட நேரம்: 10:26 (05/12/2018)

கடைசி தொடர்பு:10:26 (05/12/2018)

கோவையில் ஆடுகளைக் கொன்று மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

சிறுத்தை

"கோவையில், ஊருக்குள் புகுந்து ஆடுகளைக் கொன்று அச்சுறுத்திவந்த சிறுத்தை, இன்று  வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் சிக்கியது."

கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகப் பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள், கடந்த சில நாள்களாக அச்சத்தில் தவித்தனர். உணவு தேடி ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, அப்பகுதி மக்கள் வளர்க்கும் ஆடுகளை வேட்டையாடிவந்தது. எட்டு ஆடுகள் அந்த சிறுத்தைக்குப் பலியான நிலையில், மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக மக்கள் பதறினார்கள்.  உடனடியாக அந்த சிறுத்தையைப் பிடித்து தங்களைப் பாதுகாக்கும்படி வனத்துறையிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துவந்தார்கள்.

மக்களின் கோரிக்கையை அடுத்து வனத்துறையினர், சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாகக் கண்காணித்தனர். மோலப்பாளையம்  மற்றும் செம்மேடு ஆகிய பகுதிகளில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு  வைத்தனர். கடந்த 40 நாள்களாக அந்தக் கூண்டுகளில் சிக்காமல் உலாவிவந்த  சிறுத்தை,  இன்று அதிகாலை 5 மணி அளவில் கூண்டுக்குள் சிக்கியது.  பிடிபட்ட சிறுத்தையை தெங்குமரஹடா வனப்பகுதியில் விடுவதற்காக வனத்துறையினர் திட்டமிட்டுவருகிறார்கள். பல நாள்களாக தங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த சிறுத்தை பிடிக்கப்பட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.