வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (05/12/2018)

கடைசி தொடர்பு:11:50 (05/12/2018)

`அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வென்றவர், ஜெயலலிதா!'- கனிமொழி

தமிழக அரசியலில் ஜெயலலிதா எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார் என அவரது நினைவுதினச் செய்தியில் கனிமொழி எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

கனிமொழி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட போதிலும், அவரது மரணத்தில் சர்ச்சை இருப்பதாக பரபரப்பாகப் பேசப்பட்டது. அதனால், தமிழக அரசு சார்பாக ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா

ஜெயலலிதா மறைவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் பல்வேறு தலைவர்களும் அவரது நினைவைப் போற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதிலும் உள்ள அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க தொண்டர்கள், ஜெயலலிதாவின் படத்துக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். குக்கிராமங்களில்கூட அவரது படத்தை அலங்கரித்து வைத்து மரியாதை செலுத்தப்படுகிறது.

ஜெயலலிதா மரணம்

இந்த நிலையில், தி.மு.க-வின் மகளிர் அணிச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி, ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், ``ஒரு பெண்ணாக இருந்து அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார். ஆனால், அவரின் இறுதி நாள்களில் அவர் மரணம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் துரதிஷ்டவசமானது" எனக் குறிப்பிட்டுள்ளார்.