வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (05/12/2018)

கடைசி தொடர்பு:12:30 (05/12/2018)

3 பேரின் உயிரைப் பறித்த கள்ளச்சாராயம்! - நிலக்கோட்டையில் சோகம்

திண்டுக்கல் மாவட்டம்  நிலக்கோட்டையில், கள்ளச்சாராயம் குடித்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த முருகன்

நிலக்கோட்டை - மதுரை மெயின்ரோட்டில், அரசு அனுமதி பெறாத மது விற்பனைக் கூடம் இயங்கிவருகிறது. 24 மணி நேரமும் இங்கு கள்ளச்சாராயம் மற்றும் போலி மது கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நிலக்கோட்டையைச் சேர்ந்த முருகன், சமயன், தங்கப்பாண்டி ஆகிய மூன்று பேரும், இன்று அதிகாலை 4 மணிக்கு அந்த மதுவிற்பனை செய்யும் இடத்தில் சாராயம் குடித்ததாகச் சொல்லப்படுகிறது.

சாராயம் அருந்திய சில நிமிடத்தில், முருகன் சம்பவ இடத்திலேயே  இறந்திருக்கிறார். தங்கப்பாண்டியன், சமயன் ஆகியோர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தனர். கள்ளச்சாராயத்தை ஒழித்துவிட்டதாக அரசு சொல்லிவரும் நிலையில், சாராயம் குடித்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

உயிரிழந்த சமயன்


இதுகுறித்து பேசும் ஊர்மக்கள், "அ.தி.மு.க பிரமுகருக்குச் சொந்தமான இந்த மதுபானக் கடையில், சட்ட விரோதமாக மது மற்றும் கள்ளச்சாராயம் விற்கிறார்கள். இது தொடர்பாகப் பலமுறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. காவல் நிலையத்தில் பணம் பெற்றுக்கொண்டு கண்டுகொள்வதில்லை. ஆளுங்கட்சி செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்த மதுபானக் கடையை நடத்திவருகிறார்கள். ஏற்கெனவே, போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தால் உயிர்ப் பலி நடந்திருக்காது. இனியாவது காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க