ஜெயலலிதா அமைதி ஊர்வலத்தில் மயங்கிய அமைச்சர்; மூத்த நிர்வாகிகள்  | Minister Fainted during Jayalalithaa death anniversary Procession

வெளியிடப்பட்ட நேரம்: 14:38 (05/12/2018)

கடைசி தொடர்பு:14:38 (05/12/2018)

ஜெயலலிதா அமைதி ஊர்வலத்தில் மயங்கிய அமைச்சர்; மூத்த நிர்வாகிகள் 

ஜெயலலிதா நினைவஞ்சலி பேரணி

ஜெயலலிதாவின் 2 ம் ஆண்டு நினைவஞ்சலியையொட்டி அமைதிப் பேரணி நடந்தது. கூட்ட நெரிசலில் சிக்கி அமைச்சர், முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த நிர்வாகி என மூன்று பேர் மயக்கமடைந்துள்ளனர். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5- ம் தேதி மரணமடைந்தார். 2-ம் ஆண்டு நினைவஞ்சலியையொட்டி திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்திலிருந்து ஜெயலலிதாவின் சமாதி வரை அ.தி.மு.க.வினர் அமைதிப் பேரணியை நடத்தினர். வாலாஜா சாலையில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு காலை 8.30 மணியிலிருந்தே வி.ஐ.பிக்கள் வரத் தொடங்கினர். அ.தி.மு.க. பேரணி நடத்த காலை 9.30 மணி என அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் எனப் பலர் வந்தபோதும் முதல்வர், துணை முதல்வர் வரவில்லை. இதனால் அவர்களின் வருகைக்காக அ.தி.மு.க.வினர் காத்திருந்தனர். 

காலை 10 மணியளவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அதன்பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்தார். அதன்பிறகு அமைதி ஊர்வலம் தொடங்கியது. ஜெயலலிதா சமாதிக்குச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது வி.வி.ஐ.பிக்கள் நின்றுகொண்டிருந்த இடத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கிய அமைச்சர் ஒருவர் மயக்கம் ஏற்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார். இன்னொரு முன்னாள் அமைச்சரின் வேட்டி அவிழ்ந்துள்ளது. அவசர அவசரமாக அவர் அதை சரிசெய்தார். அடுத்து எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து அ.தி.மு.க.விலிருக்கும் மூத்த நிர்வாகி மயங்கியே விழுந்துள்ளார். உடனே அவருக்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தை தெளியவைத்தனர். அதன்பிறகு அந்த நிர்வாகியை காருக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்துள்ளனர். 

ஜெயலலிதா நினைவஞ்சலி பேரணி

திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது, ``காலை 9.30 மணிக்கு அ.தி.மு.க.வினருக்கு பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அடுத்து திவாகரன், தினகரனுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், முதல்வர், துணை முதல்வர் காலதாமதமாக வந்ததால் தினகரன், திவாகரன் ஆதரவாளர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். அவர்களின் கூட்டமும் அந்தப் பகுதியில் அதிகமானதால் கூட்ட நெரிசலில் சிக்கும் சூழலுக்கு வி.வி.ஐ.பிக்கள் தள்ளப்பட்டனர். இதற்கிடையில், ஜெயலலிதாவின் சமாதிக்கு மலர்வளையம் வைக்க முதல்வர், துணை முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் முன்வரிசையில் நின்று  கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின்னால் நின்ற மற்ற அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூட்டத்துக்குள் நுழைய அ.தி.மு.க.வினர் முயன்றனர். அவர்களை போலீஸார் கயிறு மூலம் தடுப்பு ஏற்படுத்தி தடுத்தனர். இருப்பினும் கூட்ட நெரிசலால்தான் அமைச்சர், முன்னாள் அமைச்சர், மூத்த நிர்வாகி எனச் சிலர் மயங்கினர். உடனடியாக முதலுதவி கொடுத்ததால் அவர்கள் இயல்பு நிலைக்குத் தள்ளப்பட்டனர். மேலும் அமைதிப் பேரணிக்காக நீண்ட நேரம் காத்திருந்ததும் மயக்கத்துக்கு ஒரு காரணம். கூட்ட நெரிசல் காரணமாக சிலரின் செல்போன்கள், தங்க நகைகள் தொலைந்து விட்டது'' என்கின்றனர் பேரணியில் பங்கேற்ற அ.தி.மு.க.வினர். 

 ஜெயலலிதா நினைவஞ்சலி

இதற்கிடையில், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கண்ணீருடன் இருப்பதைபோல பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனரை தென்சென்னை தெற்கு மாவட்ட பாசறை முன்னாள் இணைச் செயலாளர் ஜெ.எம்.பஷீர் வைத்துள்ளார். அந்த பேனர் குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதாவது, பேனரில் ஜெயலலிதாவின் படம் உற்றுப்பார்த்தால் மட்டுமே தெரிகிறது. கண்ணீர்மல்க காட்சியளிக்கும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி படங்கள்தான் தெளிவாகத் தெரிகிறது. அதற்கு கீழ் உள்ள வரிகளைப் படிக்காதவர்கள் கண்ணீர் அஞ்சலி யாருக்கு என்ற கேள்வி எழுப்பிவருகின்றனர். 

ஜெயலலிதாவின் நினைவஞ்சலி பேரணியில் தங்களுடைய செல்வாக்கை நிரூபிக்க அ.தி.மு.க.வினர், தினகரன், திவாகரன் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவியது. காலையிலேயே வந்த தீபாவும் அவரின் கணவர் மாதவனும் மலர்வளையம் வைத்துவிட்டு சென்றுவிட்டனர். அதன்பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்ற பேரணி நடந்தது. தொடர்ந்து தினகரனும் திவாகரனும் தனித்தனியாகப் பேரணியாகச் சென்றனர். அ.தி.மு.க.வினரைவிட நாங்கள்தான் அதிகளவில் பங்கேற்றோம் என்று சொல்கின்றனர அ.ம.மு.க.வினர். ஆனால், உளவுத்துறையும் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும் கொடுத்த ரிப்போர்ட்டில் அ.தி.மு.க.வினர்தான் அதிகளவில் பங்கேற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 ஜெயலலிதா நினைவஞ்சலி பேரணி

ஜெயலலிதாவின் அமைதிப் பேரணியால் இன்று காலை முதல் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. இதனால் சரியான நேரத்துக்கு அலுவலகம் செல்ல முடியாமல் பலர் தவித்தனர். சென்னை சென்ட்ரல் பகுதியிலிருந்து இயக்கப்பட்ட அரசு பஸ்கள், கார்கள் பைக்குகள் எழும்பூர், கடற்கரை வழியாக திருப்பிவிடப்பட்டன. இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.