ஜெயலலிதா மறைவுக்குப் பின் என்னவெல்லாம் நடந்துள்ளன? | The schemes which were opposed by Jayalalithaa are now implemented in Tamilnadu after her demise

வெளியிடப்பட்ட நேரம்: 17:37 (05/12/2018)

கடைசி தொடர்பு:17:39 (05/12/2018)

ஜெயலலிதா மறைவுக்குப் பின் என்னவெல்லாம் நடந்துள்ளன?

அவரை இழந்த பிறகு தமிழகத்தில் நடக்கும் அரசியல் தத்தளிப்புகள், அதிகாரத்துக்கான மோதல்கள், இந்த வெற்றிடத்தைப் பயன்படுத்தத் துடிக்கும் சந்தர்ப்பவாதிகள், பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அமைச்சர்கள் ஆடிய ஆடுபுலி ஆட்டங்கள், கலைப் பணியில் மூழ்கிக் கிடந்தவர்கள் பலர் திடீரெனக் கட்சிப் பணியில் காட்டுகிற ஆவேசங்கள் எனப் பலவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது ஜெயலலிதா இல்லாத ஏக்கம் பெருமளவு இருக்கிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் என்னவெல்லாம் நடந்துள்ளன?

மிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கடந்த இரண்டு ஆண்டுகளில் என்னென்ன திட்டங்களெல்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள என்பதைப் பார்ப்போம்....

எந்தவோர் அரசியல் தலைவரின் மரணத்துக்குப் பின்னும் நடைபெற முடியாத, நடக்கக்கூடாத அளவுக்கு உட்கட்சிப் பூசல்கள், திருப்புமுனைகள் ஒரு தலைவரின் மரணத்துக்குப் பின் நடந்துள்ளன என்றால் அது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எனலாம். இன்னும் சொல்லப்போனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சைகள் தொடர ஆரம்பித்தன. சென்னை அப்போலோ மருத்துவமனையில் 75 நாள்கள் சிகிச்சைக்குப் பின்னர், 2016-ம் ஆண்டு மரணமடைந்தார். அவர் மறைந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும், மரணம் தொடர்பான சர்ச்சைகளும், தமிழகத்தில் அ.தி.மு.க.  ஆட்சியின் சர்ச்சைகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

ஜெயலலிதா 2-ம் ஆண்டு நினைவு நாள்

ஓர் அரசியல் தலைவராக, தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட வேண்டியவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவர் மறைந்த பிறகு தமிழகத்தில் நடக்கும் அரசியல் தத்தளிப்புகள், அதிகாரத்துக்கான மோதல்கள், அவர் மறைவால் அரசியலில் எழுந்துள்ள வெற்றிடத்தை நிரப்பத் துடிக்கும் சந்தர்ப்பவாதிகள், பதவியைக் காப்பாற்றிக் கொள்ள போராடும் அமைச்சர்களின் ஆடுபுலி ஆட்டங்கள் என அன்றாடம் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. கலைப் பணியில் மூழ்கிக் கிடந்தவர்கள் பலர், திடீரெனக் கட்சிப் பணியில் காட்டுகிற ஆவேசங்கள் எனப் பல்வேறு சம்பவங்களையும் தொகுத்துப் பார்க்கும்போது ஜெயலலிதா இல்லாத ஏக்கம் தமிழக மக்களிடையே பெருமளவு இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

என்னென்ன திட்டங்களை எல்லாம் ஜெயலலிதா தமிழகத்துக்கு வரக்கூடாது என்று எதிர்த்தாரோ, அவை அனைத்தும் அவருடைய மறைவுக்குப் பின்னரும், ஏன் மருத்துவமனையில் இருந்தபோதே அமலாக்கப்பட்டன. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நாள்களில் குறிப்பிட்ட சில திட்டங்கள் கையெழுத்தாகின. `தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்' என்ற சட்டத்தை, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டது. ``இது மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயல். நாங்கள் நடைமுறைப்படுத்த மாட்டோம்" என்றார் ஜெயலலிதா. அடுத்து வந்த பி.ஜே.பி. ஆட்சியிலும் இதே திட்டத்தை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தியது. ஆனால், அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார் ஜெயலலிதா. ``மீறி இத்திட்டத்தைக் கொண்டு வருவீர்களானால், நாங்கள் கூறும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்" என்றார் அவர். ஆனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, இத்திட்டத்துக்குத் தமிழக அரசு இசைவு தெரிவித்தது. 

ஜெயலலிதா அறையில்  பியூஷ் கோயலுடன் எடப்பாடி

அதுபோலவே, மத்திய அரசின் உதய் மின் திட்டத்தை ஜெயலலிதா தமிழகத்தில் நடைமுறைப்படுத்த அனுமதிக்கவில்லை. அது மாநில மின்வாரியத்துக்குப் பெரும் இழப்பைக் கொடுக்குமெனத் தெரிவித்து, அந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். `இதன்மூலம் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள்தாம் பலன் பெறுமேயன்றி, பொதுமக்களுக்கு எவ்வித நலனுமில்லை' என்று அவர் எதிர்த்தார். ஆனால், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த சமயத்தில் அந்தத் திட்டத்துக்கும் கையொப்பம் பெறப்பட்டது. தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி டெல்லி சென்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்தித்து, உதய் திட்டத்துக்கு தமிழகம் ஒப்புக் கொள்வதாகத் தெரிவித்தார். 

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது எதிர்த்த இன்னொரு முக்கியமான திட்டம், மருத்துவக் கல்வியில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு, அதாவது நீட் தேர்வு.

நீட் தேர்வெழுதும் மாணவர்கள் - ஜெயலலிதா நீட் எதிர்ப்பு

"தமிழ்நாட்டின் மருத்துவச் சேர்க்கை முறை பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாகத் திகழக்கூடியது. இங்கே எவ்வித முறைகேடுகளும் இல்லை. நீட் தேர்வு அமல்படுத்தப்படுமானால் அது மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என்பதோடு நீட் தேர்வு முறையைச் செயல்படுத்தினால் கிராமப்புற மாணவர்கள், சமூகரீதியாக, பொருளாதாரரீதியாக பின்தங்கிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்" என்றார் ஜெயலலிதா. அத்துடன் நீட் முறையை எதிர்த்து. மத்திய அரசுக்கு பலமுறை கடிதங்களையும் எழுதினார். என்றாலும் நீட் தேர்வும் தமிழகத்தில் 2017-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டு, அமலுக்கு வந்தது. 

ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு தமிழகத்தின் அரசியல் சூழல் முற்றிலுமாக மாறிவிட்டிருக்கிறது. மாநில உரிமைகளை எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுக்காத அரசியலுக்குப் பெயர்பெற்றது தமிழக அரசியல் மரபு. அதன் நீட்சியாக ஜெயலலிதாவும் செயல்பட்டார் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. மாநில உரிமைகளுக்குக் குந்தகம் ஏற்படும்போதெல்லாம் தனக்கே உரிய கம்பீரத்துடன் அதை எதிர்த்து வந்த ஜெயலலிதா உருவாக்கிக் கொடுத்து விட்டுச் சென்ற தற்போதைய ஆட்சி, அதற்கு நேர் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒருவகையில் ஜெயலலிதாவுக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. தனக்கு அடுத்து, கட்சிக்கும், ஆட்சிக்கும் சரியான தலைமையை அடையாளம் காட்டத் தவறிய அவரின் தலைமைப் பண்புக்கு நாம் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிற விலை மிகப்பெரியது. 


டிரெண்டிங் @ விகடன்