வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (05/12/2018)

கடைசி தொடர்பு:15:35 (05/12/2018)

அன்று மக்களை வாழ்த்தியவர்; இன்று ஒடுங்கிப்போன சோகம்!`நூறாண்டு காலம் வாழ்க' சரளாவின் கண்ணீர் வாழ்க்கை

``எஸ்.பி. பாலசுப்ரமணியத்துடன் 'வருவாயா வேல்முருகா; சீர்காழி கோவிந்தராஜனுடன் `சிந்தனையில் மேடைக்கட்டி', இளையராஜாவுடன் 'உணக்கெனத்தானே இந்நேரமா' இப்படி 20 பாடல்கள் வரைக்கும் பாடியிருக்கேன்.''

காலம், ஒரு குயிலை பாடவிடாமல் அதன் குரல்வளையை இறுக்கிப் பிடித்தால் எப்படியிருக்குமோ, அந்த நிலையில்தான் தற்போது இருந்து வருகிறார் பழம்பெரும் பின்னணிப்பாடகி சரளா. யார் இந்த சரளா? 

சரளா தற்போது

தொலைக்காட்சியில் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானால், அதன் ஓப்பனிங் பாடலாக 'நூறாண்டுக் காலம் வாழ்க. நோய் நொடியில்லாமல் வளர்க' என்ற பாடல்தான் ஒளிபரப்பாகும். `பேசும் தெய்வம்' படத்தில் இடம்பெறும் இந்தப் பாடலை பாடியவர் பின்னணிப் பாடகி சரளாதான். இதே பாடலை சில வருடங்களுக்கு முன்பு வெளியான வீடியோ பேட்டியில் பாடியிருப்பார். அந்த வீடியோ இப்போது பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. எப்படியிருக்கிறார் இந்த மூத்தப்பாடகி என்று தெரிந்துகொள்ள அவரைத் தொடர்புகொண்டோம். 

கணவருடன் (பழைய படம்)

``அந்த வீடியோ ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எடுத்ததுமா. இப்ப என்னால பாடவும் முடியாது; பேசறதும் கஷ்டம்தான்டா'' என்ற சரளாம்மாவின் மெல்லிய குரல், அடுத்த வார்த்தை பேச முடியாமல்  குழறலுடன் தவிக்கிறது. சரளாம்மா கடந்த 2 வருடங்களாகப்  பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு வலதுபக்கம் செயல்பட முடியாமல் தவித்து வருகிறார். தற்போது 80 வயது ஆகிறது இவருக்கு. 

``நான் சின்ன வயசுல கச்சேரிகளில் பாடிக்கிட்டிருந்தேன். அப்ப ஒரு தடவை மியூசிக் டைரக்டர் ராமமூர்த்தி (விஸ்வநாதன்) என் குரலை கேட்டுட்டு, `ரொம்ப இனிமையா இருக்குன்னு' சொல்லி, தேன்மழை என்ற படத்துல பாடறதுக்கு வாய்ப்புக் கொடுத்தார். அதுக்கப்புறம் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துடன் 'வருவாயா வேல்முருகா; சீர்காழி கோவிந்தராஜனுடன் 'சிந்தனையில் மேடைக்கட்டி', இளையராஜாவுடன் 'உனக்கெனத்தானே இந்நேரமா' இப்படி 20 பாடல்கள் வரைக்கும் பாடியிருக்கேன். ஆனா, என்னோட 70 வயசு வரைக்கும்  எண்ண  முடியாத அளவுக்கு மேடைக் கச்சேரிகளில் பாடியிருக்கேன். மேடைக் கச்சேரிகளுக்காக ஊர் ஊராக போயிட்டு வந்துட்டு இருந்ததாலேயே சினிமாவில் பெருசா கவனம் செலுத்த முடியலை. அதுக்குள்ள எனக்கு வயசும் ஓடிடுச்சு; பக்கவாதமும் வந்துடுச்சு. என் ரெண்டு பொண்ணுங்களும் கல்யாணமே பண்ணிக்காம என்கூடத்தான் இருக்காங்க. எனக்குப் பிறகு அவங்களோட எதிர்காலத்தை நினைச்சா தான் பயமா இருக்குமா'' என்றவரின் குரல் கண்ணீரில் கரைகிறது.