வெளியிடப்பட்ட நேரம்: 16:24 (05/12/2018)

கடைசி தொடர்பு:16:24 (05/12/2018)

`நான் உன் அண்ணன்; கவலை வேண்டாம்!'- செல்வராணியை நெகிழவைத்த மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்காக கவிதை பாடிய பெண் காவலர், போலீஸார் கொடுத்த நெருக்கடியால் தன் பதவியை ராஜினாமா செய்தார். செல்வராணியை நேரில் சந்தித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், `உனக்கு எப்போதும் அண்ணனாக இருப்பேன்' எனக் கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலினுடன் செல்வராணி

திருச்சி மாநகர போலீஸ் நுண்ணறிவுப் பிரிவில் தலைமைக்காவலராக பணியாற்றியவர் செல்வராணி. கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், `கவிசெல்வா” எனும் புனைபெயரில் கவிதைகள் எழுதி வருகிறார்.

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்தபோது இரங்கல் தெரிவித்து கவிதை வெளியிட்டிருந்தார். அந்தக் கவிதை வீடியோவில் வெளியிட்டிருந்தார். ``தயவுசெய்து இதை அரசியலாகப் பார்க்க வேண்டாம்'' எனக் கூறியிருந்தார். செல்வராணியின் கவிதை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதைத் தொடர்ந்து செல்வராணி திருச்சி மாநகர காவல்துறையிலிருந்து மத்திய மண்டல காவல்துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

செல்வராணி

பணியிடை மாற்றத்தை ஏற்க மறுத்த அவரிடம் காவல்துறை சார்பில் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. கருணாநிதிக்கு இரங்கல் கடிதம் எழுதியது குறித்து விளக்கம் கோரி  நோட்டீஸ் அனுப்பப்பட்டது. விருப்ப ஓய்வில் செல்வதாக காவல்துறைக்குக் கடிதம் அளித்தார் செல்வராணி. அதன்பின் 3 மாதம் மருத்துவ விடுப்பில் இருந்தார். இந்த நிலையில், விருப்ப ஓய்வு ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான கடிதம் திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வராணிக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பதவியில் இருந்து விலகினார். 

இதுகுறித்து செல்வராணி, ``முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் கவிதை பாடியதற்கு விளக்கம் கேட்டு எனக்கு மெமோ அளித்தனர். அதற்குப் பதில் அளிப்பதற்குள் திடீரென என்னை பணியிட மாற்றம் செய்தனர். விளக்கம் தருவதற்குள் எப்படி பணியிட மாற்றம் செய்யலாம் என அதிகாரிகளிடம் முறையிட்டும் யாரிடமும் சரியான பதில் இல்லை. இந்த நிலையில், என் பேச்சுரிமை பறிக்கப்பட்டதாக உணர்ந்தேன். பணியில் சேர்ந்தால் மீண்டும், மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டு பழி வாங்கப்படலாம் என்பதால் குடும்பத்தின் நலன் கருதி பணியிலிருந்து விலகிவிட்டேன். இதற்கு முன்பு ஜெயலலிதா மறைந்தபோது நான் கவிதை வாசித்தேன். அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை'' என்றார்.
 
செல்வராணி வீட்டில் ஸ்டாலின்
 
இந்த நிலையில், நேற்று காவிரியின் குறுக்கே மேக்கே தாட்டூ  அணை கட்டுவதற்கு எதிரான திருச்சி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்திருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், செல்வராணி விருப்ப ஓய்வு கொடுத்த தகவல் அறிந்து கே.கே.நகர் ரெங்கா நகரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றார். அப்போது இரங்கல் தெரிவித்ததற்காக மெமோ கொடுத்துள்ளார்களா எனக் கேட்ட ஸ்டாலின் செல்வராணிக்கு வழங்கப்பட்ட மெமோ கடிதத்தை வாங்கிப் படித்தார்.

அந்தக் கடிதத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்காக நீங்கள் எப்படி கவிதை வாசிக்கலாம் என்றும், இரங்கற்பாவில் கருணாநிதியை அப்பா என வார்த்தைக்கு வார்த்தை குறிப்பிட்டுள்ளது குறித்தும் விளக்கம் கேட்டிருந்ததைப் பார்த்து ஸ்டாலின் பதறிப் போனார். அதையடுத்து செல்வராணி, கருணாநிதி குறித்து கவிதை வாசித்தார். இறுதியாக ஸ்டாலின்,  இன்னும் எத்தனை வருடங்கள் சர்வீஸ் உள்ளது. இனி என்ன செய்யப்போகிறீர்கள் எனக் கேட்க, சட்டென செல்வராணி,  இன்னும் 15 ஆண்டுகள் சர்வீஸ் இருந்தது. இனி தலைவர் கருணாநிதி விட்டுச்சென்றுள்ள கலைப் பணியை தொடர்வேன். அவரது கவிதைகளை பிரபலமாக்குவேன் எனச் சொல்ல, உடனே ஸ்டாலின், கருணாநிதியின் மறைவுக்காக நீங்கள் கவிதை படித்ததைப் பார்த்தேன். தலைவர் கருணாநிதியை வார்த்தைக்கு வார்த்தை அப்பா என அழைத்து கவிதை படித்துள்ளீர்கள். நான் உங்களுக்கு அண்ணனாக இருந்து இறுதி வரை செய்ய வேண்டிய உதவிகளைச் செய்வேன். கவலை வேண்டாம்'' எனக் கூறினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க