வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (05/12/2018)

கடைசி தொடர்பு:16:50 (05/12/2018)

`சர்வாதிகார வார்த்தைகள்!’ - ஸ்டெர்லைட்டுக்கு எதிராகக் கொந்தளிக்கும் அமீர்

ஸ்டெர்லைட் ஆலை விஷயத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கூறிய வார்த்தைகள் சர்வாதிகாரமான வார்த்தை என்று கொந்தளித்த இயக்குநர் அமீர், ``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தமிழக அரசு சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார். 

                                                  அமீர்

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே குழுமூரை சேர்ந்த நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா. மாணவியின் இறுதி அஞ்சலியின்போது தமிழக அரசை அவதூறாகப் பேசியதாக இயக்குநர் அமீர் மீது தொடரப்பட்ட வழக்கில் அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. 

                                               இயக்குநர்

நீதிமன்றத்தில் இன்று ஆஜரான அமீர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். ``ஸ்டெர்லைட் ஆலை விஷயத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறிய வார்த்தைகள் சர்வாதிகாரமான வார்த்தையாகும். இதில் தமிழக அரசு மத்திய அரசின் கைப்பாவையாகவே செயல்படுகிறது. கஜா புயல் நிவாரணப் பணிகளில் தமிழக அரசு சரியாகச் செயல்படவில்லை. தமிழக அரசும் மத்திய அரசும் தமிழக மக்கள் மீது அக்கறை இல்லாமலேயே உள்ளது. இதனால்தான், இதுவரை புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிடவில்லை. தமிழக அரசு கூறிய நிவாரணத் தொகையும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. மத்திய அரசு சொல்வதைக் கேட்கும் அரசாகவே தமிழக அரசு உள்ளது. மாநில சுயாட்சி மறுக்கப்படுகிறது. மாநில சுயாட்சி கிடைக்கும் போதுதான் மாநிலத்திற்கான உரிமைகள் கிடைக்கும்” என்றார்.

அனிதா

ஒகேனக்கலில் அணை கட்டலாம் என அ.தி.மு.க எம்பி தம்பிதுரை கூறியிருப்பது குறித்து கேட்டபோது. ``அவ்வாறு கட்டினால் மகிழ்ச்சிதான். தற்போதுள்ள நிலையில் மத்திய மாநில அரசுகளின் அறிவிப்புகள் அனைத்தும் செய்தியாகவே உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தமிழக அரசு நாளை நடைபெற உள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்'' எனக் கூறினார்.