வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (05/12/2018)

கடைசி தொடர்பு:18:20 (05/12/2018)

எரிந்துகொண்டிருந்த மின்விளக்கு; சாலையில் விழுந்த மின்கம்பம்!- பல உயிர்களைக் காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்

தஞ்சாவூரில் அதிகாலையில் வாகனம் மோதி மின்கம்பம் சாய்ந்ததில் சாலையின் குறுக்கே மின் கம்பிகள் விழுந்தன. அந்தப் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படாமல் இருந்ததால் அதிர்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஆட்டோவை குறுக்கே நிறுத்தி விபத்து ஏதும் நிகழாமல் அந்த வழியாகச் சென்றவர்களைக் காத்தார். அவரை பொதுமக்கள் நெகிழ்ச்சியோடு பாராட்டி வருகின்றனர்.

தஞ்சாவூர் மேலவீதியில் வசித்து வருபவர் பாண்டுரங்கன். சொந்தமாக ஆட்டோ வைத்துள்ள இவர் பகல் நேரத்தில் பள்ளிக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சவாரி செல்கிறார். இரவு நேரத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு மொத்தமாக டீ போட்டுக்கொண்டு கொடுக்கும் வேலையும் செய்து வருகிறார். இவர் நேற்று அதிகாலை 3.15 மணியளவில் மேம்பாலத்தின் வழியாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாலத்தின் இறக்கத்தில் அடையாளம் தெரியாத பெரிய வாகனம் மோதியதில் மின் கம்பம் சாய்ந்து கிடந்ததோடு மின் ஒயர்களும் சாலையின் ஒரு பகுதி முழுக்க கிடந்துள்ளது.

வாகன ஓட்டிகளிடம் பேசும் ஆட்டோ டிரைவர் பாண்டுரங்கன்

மின்சாரம் நிறுத்தப்படாமல் சென்று கொண்டிருந்ததால் தெருவிளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவர் பாண்டுரங்கன், கீழே கிடக்கும் மின் கம்பிகளில் மின்சாரம் சென்று கொண்டிருக்கிறது. இதை யாராவது மிதித்தாலோ அல்லது அந்த வழியே வரும் வாகனங்கள் அதன் மீறி ஏறிவிட்டாலோ பெரும் விபத்து ஏற்படும். உயிர்ப் பலியாவதற்கும் வாய்ப்புகள் உள்ளது எனப் பதறியவர், உடனே அருகே இருந்த காவல் நிலையத்துக்குச் சென்று தகவல் கூறியிருக்கிறார். அங்கே தூக்கத்தில் இருந்த பெண் காவலர் ஒருவர், நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்க கிளம்புங்க' என அலட்சியமாக கூறி அனுப்பியிருக்கிறார்.

மின்கம்பம் அறுந்துக்கிடந்த இடத்தில் பாண்டுரங்கள்

மனது கேட்காத பாண்டுரங்கன் மீண்டும் அந்தப் பாலத்துக்குச் சென்று மின் கம்பி அறுந்து கிடந்த சாலை பக்கம் யாரும் வராத வகையில் ஆட்டோவை குறுக்கே நிற்க வைத்து மறைத்தார். மேலும், அங்கேயே நின்றுகொண்டு அந்த வழியாக வந்த வாகனங்களை மின் கம்பி அறுந்து கிடக்கு; பார்த்துச் செல்லுங்கள் என எச்சரிக்கை செய்து அனுப்பிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த மற்ற சிலர் பாண்டுரங்கனுக்கு உதவி செய்து சாலையில் இருந்த தடுப்புகளைப் போட்டு சுத்தமாக மின்கம்பி கிடந்த இடத்தை மறைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதோடு பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளார். அதிகாலை நேரத்தில் தான் சென்ற வேலையைப் பற்றி நினைக்காமல் பெரும் விபத்து ஏற்பட்டுவிடும் எனக் கருதி அங்கேயே நின்று எந்த இழப்புகளும் ஏற்படாமல் காத்த பாண்டுரங்கனை பொதுமக்கள் நெகிழ்ச்சியோடு பாராட்டிவருகிறார்கள்.

ஆட்டோ ஓட்டும் பாண்டுரங்கன்

இது குறித்து பாண்டுரங்கனிடம் பேசினோம். ``அதிகாலை 3.15 மணிக்கு அந்த வழியாக சென்று கொண்டிருந்தேன். பெரிய வாகனம் மோதி மின் கம்பம் விழுந்து கிடந்தது. மின் கம்பிகளும் சாலையின் குறுக்கே கிடந்தன. அதில் மின்சாரம் சென்று கொண்டிருந்தது. பதறிப் போன நான் காவல்நிலையத்துக்குச் சென்று தகவல் கொடுத்தேன். ஆனாலும் என மனது கேட்கவில்லை. அந்த வழியாக வருபவர்களுக்கு என்ன ஆகுமோ என பதைபதைக்கத் தொடங்கியது. உடனே அங்கேயே சென்று ஆட்டோவை குறுக்கே நிறுத்தி வந்த வாகனங்களை ஒதுங்கிப் போகச் சொன்னேன். இரண்டு மணி நேரத்துக்கு மேலாக இதேபோல் சொல்லிக்கொண்டிருந்தேன். பின்னர் 5.30 மணிக்கு அந்தப் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. பொழுது விடிந்ததும் அதிகாரிகள் சிலர் வந்து பார்த்தனர். 7.30 மணிக்குதான் மின் கம்பம் மற்றும் கம்பிகள் அகற்றப்பட்டு முழுமையாக போக்குவரத்துக்கு சரி செய்யப்பட்டது. அங்கு இருந்தவர்கள் எல்லோரும் என்னைப் பாராட்டினர். அது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் பெரும் விபத்து ஏற்படாமல் இருக்க அக்கறையுடன் செயல்பட்டதை எண்ணி என் மனைவியும் பாராட்டினார்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க