வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (05/12/2018)

கடைசி தொடர்பு:18:00 (05/12/2018)

`பேச்சு சுதந்திரத்தைப் பறிக்கிறது!’ - தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபியா மனு!

விமானத்தில் பா.ஜ.க-வுக்கு எதிராகக் கோஷமிட்ட ஆராய்ச்சி மாணவி லூயிஸ் ஷோபியா, தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஷோபியாவை அழைத்துச்செல்லும் போலீஸ்

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு கடந்த செப்டம்பர் 3-ம் தேதி வந்த விமானத்தில் கனடாவில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொண்டு வரும் லூயிஸ் ஷோபியா, தன் தந்தை அந்தோணிசாமி, தாய் மனோகரி ஆகியோருடன் பயணம் செய்தார். அதே விமானத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனும் பயணம் செய்தார். மாணவி லூயிஸ் ஷோபியா, தமிழிசையைப் பார்த்ததும், “பாசிச பா.ஜ.க ஒழிக, மோடி ஒழிக” எனக் கோஷம் எழுப்பியுள்ளார். விமானம் தூத்துக்குடி வந்தவுடன், வரவேற்பறை அருகில் மாணவி ஷோபியாவுக்கும் தமிழிசைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில் ஷோபியா மீது புதுக்கோட்டை போலீஸார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

மாணவி ஷோபியா

பின்னர், அடுத்த நாளே நிபந்தனையற்ற ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் ஷோபியா. ``பா.ஜ.க தலைவர் தமிழிசை உள்ளிட்ட பா.ஜ.க-வினர் தன்னையும் தன் மகளையும் தகாத வார்த்தைகளில் பேசி கொலைமிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புதுக்கோட்டை காவல்நிலையத்தில் ஷோபியாவின் தந்தை அந்தோணிசாமி புகார் அளித்தார். ஆனால், அந்தப் புகார் மீது பல நாள்களாக நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டாததால், தமிழிசை மற்றும் பா.ஜ.க-வினர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றமும் தமிழிசை உள்ளிட்ட பா.ஜ.க-வினர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்திடுமாறு புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டது. ஆனால், ``சிசிடிவி கேமரா காட்சிகள், கட்சி நிர்வாகிகளிடம் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில் தமிழிசை உள்ளிட்ட பா.ஜ.க-வினர் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இல்லை” என விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தந்தையுடன் மாணவி

இந்நிலையில், தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஷோபியா மனுத்தாக்கல்  செய்துள்ளார். அந்த மனுவில், “விமானத்தில் கோஷமிட்டது தொடர்பாக புதுக்கோட்டை காவல்நிலைய போலீஸார் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது அரசியலமைப்பு வழங்கியுள்ள பேச்சு சுதந்திரத்தைப் பறிப்பதாகும். எனவே, தூத்துக்குடி புதுக்கோட்டை போலீஸார் என் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். அதுவரை இந்த வழக்கை விசாரிக்கவும் தடை விதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த மனு மதுரைக் கிளையில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.  

  

நீங்க எப்படி பீல் பண்றீங்க