வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (05/12/2018)

கடைசி தொடர்பு:19:23 (05/12/2018)

‘சஞ்சாரம்’ நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது!

 2018-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது இன்று (05.12.2018) டெல்லியில் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ் இலக்கியத்துக்கான சாகித்ய அகாடமி விருது ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கரிசல் பூமியின் பின்னணியில் அமைந்திருக்கும் நாதஸ்வரக்காரர்களின் வாழ்க்கை பற்றியது இந்த நாவல். சாகித்ய அகாடமி விருதுதான் மத்திய அரசால் இந்திய மொழி இலக்கியங்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது. 

சாகித்ய அகாடமி


எஸ்.ராமகிருஷ்ணன் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணறு என்ற ஊரில் பிறந்தவர். இவரின் தந்தை சண்முகம் கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்க்கரசி. மனைவி சந்திர பிரபா. குழந்தைகள் ஹரி பிரசாத், ஆகாஷ். புத்தகங்கள் படிப்பதில் தீவிர விருப்பம் கொண்டவர். ஒருபுறம் தீவிர திராவிடக் கொள்கையிலும் மறுபுறம் தீவிர சைவ சித்தாந்தப் பின்புலத்தின் அடிப்படையிலும் வளர்ந்தவர். புராணக் கதைகளை மட்டுமல்ல; அதில் வரும் இடங்களுக்கும் பயணம் செய்து பார்ப்பதில் தீவிர ஆர்வம் உடையவர். அப்படி மகாபாரதம் நடந்த இடங்களுக்குப் பயணம் செய்தவர். சிலப்பதிகாரத்தை மையமிட்டு கண்ணகி சென்ற இடங்களைத் தேடிப் பயணம் செய்துவருபவர்.

நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய எழுத்தாளர். கடந்த 25 ஆண்டுக்காலமாக சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் என்று பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். முழுநேர எழுத்தாளரான இவர் இந்தியா முழுவதும் சுற்றியலைந்து வாழ்வு அனுபவங்கள்கொண்ட தேசாந்திரி. உப பாண்டவம், நெடுங்குருதி, யாமம், உறுபசி, துயில், நிமித்தம், சஞ்சாரம், இடக்கை, பதின் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க நாவல்கள். எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா போன்றவை இவரது முக்கிய வரலாற்று நூல்களாகும். சில திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

ஆனந்த விகடனில் இவர் எழுதிய ‘துணையெழுத்து’ தொடர் பரவலாக வாசகர்களின் கவனத்துக்கு உள்ளானது. அதைத் தொடர்ந்து கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி என்று வெளியான புத்தகங்கள் இவருக்குத் தமிழில் பரந்த வாசக தளத்தை உருவாக்கியிருக்கிறது. அவருக்கு 2018-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது இன்று (05.12.2018) டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ளது.