`சகோதரர்களே முன் வாருங்கள்; வந்து உதவி புரியுங்கள்!’ - கஜா பாதிப்புக்குக் குரல் கொடுக்கும் அமிதாப் | Amitabh bachchan lends his voice over cyclone gaja relief

வெளியிடப்பட்ட நேரம்: 17:12 (05/12/2018)

கடைசி தொடர்பு:17:12 (05/12/2018)

`சகோதரர்களே முன் வாருங்கள்; வந்து உதவி புரியுங்கள்!’ - கஜா பாதிப்புக்குக் குரல் கொடுக்கும் அமிதாப்

அமிதாப்பச்சன்

தமிழகத்தின் நாகை, வேதாரண்யம் பகுதிகளுக்கு இடையே, கடந்த மாதம் 15-ம் தேதி கஜா புயல் கரையைக் கடந்தது. இந்தப் புயல் தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. இந்தப் புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையான சேதத்தை கண்டுள்ளது. மரங்கள் எல்லாம் புயல் காற்றில் சாய்ந்துள்ளன. மின் கம்பங்கள், சாலைகள் ஆகியவை புயலால் சேதமடைந்துள்ளன. டெல்டா மாவட்டங்கள் இருளில் மூழ்கியுள்ளது. கடலோர கிராமங்களில் சுமார் 1 அடி உயரத்துக்கு சேறு சேர்ந்திருப்பதால் மக்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளனர். 

கஜா புயல்

இந்த நிலையில், பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கஜா புயல் சேதங்கள் குறித்து பேசிய வீடியோவை கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் ‘இந்தாண்டு நவம்பர் 15-ம் தேதி கஜா புயல் தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சூறையாடியது. அப்பகுதிகளில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான மக்கள் தங்களின் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். 3.4 லட்சம் வீடுகள் கஜா புயலால் சூறையாடப்பட்டுள்ளது. இந்தப்பகுதிகளில் இருந்த தென்னைமரங்கள் 60 சதவிகிதம் புயலால் சாய்ந்துள்ளன. லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கமல்ஹாசன்

மத்திய மாநில அரசுகள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றன. ஒரு தேசம் ஒரு மக்கள் என்பதை நிரூபிப்பதற்கான தருணம் இது. சகோதரர்களே முன்னால் வாருங்கள்; வந்து உதவி புரியுங்கள். நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களைக் களத்தில் சந்தித்து வருகிறார். உங்களுடைய உதவியும் இத்தருணத்தில் தேவைப்படுகிறது. தமிழகத்துக்கு கரம் கொடுங்கள்.. நன்றி” என அதில் கூறியிருக்கிறார்.

ட்வீட்

இதைத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், ‘நன்றி அமித் ஜி. கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அழிவுகளைத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். நம் நாட்டில் பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும் உங்களைப் போன்ற மக்கள் அதை இணைக்கும் நூலாக இருக்கின்றனர்.எனப் பதிவிட்டுள்ளார்.