வெளியிடப்பட்ட நேரம்: 17:28 (05/12/2018)

கடைசி தொடர்பு:17:28 (05/12/2018)

அடுத்தடுத்து 2 பேர் பலி; 18 பேர் பாதிப்பு! - சேலம் மக்களை அச்சுறுத்தும் பன்றிக் காய்ச்சல்

சேலம் அரசு மருத்துவமனை- பன்றிக் காய்ச்சல்

பன்றிக் காய்ச்சலால் குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து வருகிறார்கள். இதனால் சேலம் வாசிகள் பன்றிக் காய்ச்சால் பீதி அடைந்திருக்கிறார்கள். நேற்று முதல்வரின் சொந்த ஊரான எடப்பாடிக்கு அருகே உள்ள பூலாம்பட்டியைச் சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்ணும், சேலம் குகையில் உள்ள சிவனார் தெருவைச் சேர்ந்த சீனிவாசனின் மனைவி ரத்னமாலாவும் பன்றிக் காய்ச்சலால் அடுத்தடுத்து இறந்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து சேலம், தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சல் தீவிரம் அடைந்துள்ளது. இதையடுத்து, சேலம் மோகன்குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அப்படிக் காய்ச்சலால் வருபவர்களைப் பரிசோதனை செய்து பன்றிக் காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் தனி வார்டில் சேர்க்கப்படுகிறார்கள். ஆனாலும் சிகிச்சை பலனின்றி கடந்த வாரத்திலிருந்து 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என இறந்துள்ளனர்.

மருத்துவமனை நிர்வாகத்தினர் உண்மைத் தகவலை வெளியில் சொல்லாமல் மர்மக் காய்ச்சலால் இறந்ததாகக் கூறி வருகிறார்கள். இதையடுத்து, நேற்று எடப்பாடி அருகே பூலாம்பட்டியைச் சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். அதேபோல குகை சிவனார் தெருவைச் சேர்ந்த சீனிவாசனின் மனைவி ரத்னமாலாவுக்கு (39) தொடர் காய்ச்சல் இருந்ததால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், காய்ச்சல் குறையாமல் இருந்தது. அதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்க்கப்பட்டார். இங்கு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் மேலும் 18 பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பதால் அவர்களும் ஸ்பெஷல் வார்டில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் சேலம் மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க