கணவனுடனான தகராறில் இரண்டரை வயதுக் குழந்தையைக் கொன்ற தாய்! | Nellai: Mother arrested for killing her daughter

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (05/12/2018)

கடைசி தொடர்பு:19:00 (05/12/2018)

கணவனுடனான தகராறில் இரண்டரை வயதுக் குழந்தையைக் கொன்ற தாய்!

நெல்லை மாவட்டம் மேலப்பாட்டம் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாகப் பெற்ற தாயே இரண்டரை வயதுக் குழந்தையைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். 

கொலை

குழந்தையைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்ட மகராசிநெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன். சென்னையில் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். நாராயணனின் மனைவி மகராசி சொந்த ஊரில் வசித்து வருகிறார். இருவருக்கும் திருமணமாகி 4 வருடங்கள் ஆன நிலையில், இந்தத் தம்பதிக்கு இரண்டரை வயதில் சிவமகேஸ்வரி என்ற பெண் குழந்தை இருந்தது. 

நாராயணன், மகராசி தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவரும் நாராயணன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வரும்போது தகராறு ஏற்பட்டு வந்ததால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மகராசி தன் தாய் சந்திராவுடன் மேலப்பாட்டம் கிராமத்தில் வசித்து வந்தார். கணவரைப் பிரிந்ததால் கடந்த சில தினங்களாகவே மகராசி மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். 

இந்த நிலையில், இன்று காலை விரக்தியில் இருந்த அவர் தன் இரண்டரை வயதுக் கைக்குழந்தை சிவமகேஸ்வரியைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிவிட்டார். வீட்டின் வாசலில் குழந்தை இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மகராசியின் தாய் சந்திரா, வீட்டில் இருந்த மகராசியைத் தேடியிருக்கிறார். அவரைக் காணாததால் சந்தேகம் அடைந்த அவர், குழந்தையின் இறப்பு குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

கொலை

இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து மகராசியைத் தேடிவந்த நிலையில், சிறிது நேரத்துக்குப் பின்னர் அவரே வீட்டுக்கு வந்துள்ளார். போலீஸார் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது மன உளைச்சல் காரணமாக குழந்தையைக் கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். அதனால் அவரைக் கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர். பெற்ற தாயே குழந்தையைக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.