வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (05/12/2018)

கடைசி தொடர்பு:18:56 (05/12/2018)

``மாணவர்களுக்கும் தேர்தல் பற்றிய விழிப்புஉணர்வு தேவை!" - பள்ளி ஆசிரியர் புது முயற்சி

``மாணவர்களுக்கும் தேர்தல் பற்றிய விழிப்புஉணர்வு தேவை!

மிழகத்தில் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருமா என்பது தெரியவில்லை. இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடத்தப்படாமல் இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கிடையே விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த `சர்கார்' திரைப்படத்தில் தேர்தலில் கள்ள ஓட்டுப் போடுவதை எதிர்த்து, அந்தப் படத்தில் ஹீரோ களமாடுவதுபோல் கதையை அமைத்து, தமிழகத்தில் அதிரடி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தினார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்நிலையில், மாணவர்களுக்கு தேர்தல் குறித்து விழிப்புஉணர்வு வரவும், அவர்களின் ஆளுமைத் திறனை வளர்க்கவும் மாணவர்கள் தேர்தலை நடத்தி அசத்தி இருக்கிறார் கரூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர். 

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் இருக்கிறது தொட்டியப்பட்டி. இந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரான மூர்த்தி, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்குத் தேர்தல் நடத்தி ஒன்பது பொறுப்புகளுக்கு மாணவப் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்துள்ளார். மாணவர்களிடம் இளம் வயதிலேயே ஐ.ஏ.எஸ் கனவை விதைப்பதற்காக ஒரு வகுப்புக்கு ஒரு ஐ.ஏ.எஸ் என்று வெற்றி பெற்ற மாணவர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர்...வருடத்துக்கு தலா ஒருவரை ஏற்கெனவே தேர்ந்தெடுத்து, மாணவர்கள் மனதில் கலெக்டராகும் கனவை வளர்த்து வருகிறார். இந்நிலையில்தான், மாணவர்களைக் கொண்டே ஓட்டளிக்க வைத்து, ஒன்பது பேரை பொறுப்பாளர்களாகத் தேர்வு செய்திருக்கிறார். தேர்தல் நடப்பதற்கு பத்து நாளைக்கு முன்பிருந்தே, நிஜ தேர்தலுக்குப் போட்டியாக யார், யார் களத்தில் இருக்கிறார்கள், என்ன பொறுப்பு, அவர்களுக்கான சின்னம் என்ன என்பது உள்ளிட்ட விசயங்கள் அடங்கிய பேனர்களை பள்ளி வளாகம் முழுவதும் வைத்திருந்தார்கள். பள்ளியின் முதன்மைச் செயலாளர், துணைச் செயலாளர், மாணவர் சபை ஒருங்கிணைப்புக் குழு இயக்குநர் உள்ளிட்ட ஒன்பது பதவிகளுக்கு 28 மாணவர்கள் மனுத்தாக்கல் செய்தனர். தேர்தல் களத்தில் நின்ற 28 மாணவர்களும் பள்ளியில் உள்ள 68 மாணவ, மாணவிகளிடம் ஓட்டுக் கேட்டனர். இறுதியாக தேர்தல் நாளன்று க.பரமத்தி வட்டாரக் கல்வி அதிகாரி முருகன், `தேர்தலில் வாக்களிப்பது எப்படி?' என்பது குறித்த விழிப்புஉணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தினார்.

வாக்களிக்கும் முன் மாணவர் கையில் மை..தேர்தலில் மாணவர்கள் வாக்களிக்க ஏதுவாக, பள்ளியின் ஒரு அறையில் வாக்குச் செலுத்தும் இடம் அமைக்கப்பட்டிருந்தது. மாணவ, மாணவிகள்  ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். வழக்கமாக நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களின் போது இடம்பெறும் அமைப்புகள் போலவே பள்ளியிலும் தேர்தலுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாக்குச்சீட்டுகளை பெற்றுக் கொண்ட ஒவ்வொரு மாணவரும் 9 பொறுப்புகளுக்கு பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும்விதமாக வாக்களித்தனர். வாக்களித்த வாக்குச்சீட்டை வாக்குப் பெட்டியில் போட்டனர். மாணவர்கள் அனைவரது விரல்களிலும் அவர்கள் வாக்களித்ததற்கு அடையாளமாக மை வைக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட்ட மாணவ வேட்பாளர்களுக்கு ஆகாய விமானம், பஸ், கார், லாரி, ரோஜா, சூர்யகாந்தி, கால்பந்து உள்ளிட்ட சின்னங்கள் வழங்கப்பட்டிருந்தன. பள்ளித் தலைமை ஆசிரியர் மூர்த்தி தலைமையிலான தேர்தல் குழுவினர் தேர்தலைக் கண்காணித்தனர். தேர்தல் முடிந்ததும், சிறிது நேரத்தில் ஒரு ரகசிய அறையில் வாக்குகள் எண்ணப்பட்டன. இறுதியில் தேர்தலில் வெற்றிபெற்ற ஒன்பது பொறுப்பாளர்களையும் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் அறிவித்தார். அவர்களுக்குப் பின்னர் மலர்க்கிரீடம் அணிவித்து, வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும் வழங்கினார். அப்போது ஒன்பது மாணவர்களும் பள்ளியில் தூய்மைப் பணியை மேற்கொள்வது, விளையாட்டுத் துறையை மேம்படுத்துவது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை எடுத்து தங்களின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர். 

இந்த மாணவத் தேர்தல் பற்றி சம்பந்தப்பட்ட பள்ளியின் மூர்த்தி(தலைமை ஆசிரியர்)தலைமை ஆசிரியர் மூர்த்தியிடமே பேசினோம். ``மாணவர்களிடையே தலைமைப் பண்புகளை, ஆளுமைத் திறனை, நிர்வாகத் திறமையை வளர்க்கும் பொருட்டு, அவர்களுக்குப் பல்வேறு விசயங்களைச் செய்து வருகிறோம். அதில் ஒன்றுதான் இந்த மாணவத் தேர்தல். தேர்தல் குறித்த விழிப்புஉணர்வு மக்களுக்கு ஏற்படவே இந்த முயற்சி. வாக்களித்த மாணவ, மாணவியர் சுதந்திரமாகவும், ரகசியமாகவும் வாக்களிக்க வசதிகள் செய்திருந்தோம். ஏற்கெனவே மாணவர்களின் மனதில் சிறு வயதிலேயே ஐ.ஏ.எஸ் கனவை விதைப்பதற்காக வருடாவருடம் ஒவ்வொரு வகுப்புக்கும் ஐ.ஏ.எஸ் தேர்வு வைக்கிறோம். பொது அறிவு கேள்விகள் கொண்டதாக அந்தத் தேர்வு இருக்கும்.

அந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை வகுப்புக்கு ஒருவராகத் தேர்ந்தெடுத்து, அவர்களை ஒரு வருடத்திற்கு அந்தந்த வகுப்பின் ஐ.ஏ.எஸ் மாணவனாக அறிவிப்போம். அவர்கள்தான் அந்தந்த வகுப்புகளின் அனைத்து நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். இது மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. `நாமும் ஐ.ஏ.எஸ் ஆகணும்'ங்கிற வெறியில் ஒவ்வொரு மாணவனும் அடுத்தடுத்த வருடங்களில் இந்தத் தேர்வை சிறப்பா எழுதுவதற்கு முயற்சி பண்றாங்க. அதுபோல்தான்,மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்க இந்த மாணவத்  தேர்தலை நடத்தி இருக்கிறோம்" என்றார். 


டிரெண்டிங் @ விகடன்