வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (05/12/2018)

கடைசி தொடர்பு:18:02 (05/12/2018)

`என்னுடைய தகவல்களைத் தர வேண்டாம்!’ - எரவாடா சிறைக்குக் கடிதம் எழுதிய சஞ்சய் தத்

அப்போது குறுக்கிட்ட பேரறிவாளன் தரப்பு வழக்குறைஞர் நிலேஷ் உகே, `அப்படியெனில் மாநில அரசை ஒரு கைதிதான் வழிநடத்துகிறாரா?' எனக் கேள்வி எழுப்பினார்.

`பேரறிவாளன் கேட்கும் தகவல்களை வழங்கக் கூடாது’ என மும்பை எரவாடா சிறைக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். `அரசாங்கத்தையே சஞ்சய் தத் இயக்குவதை இந்தக் கடிதம் மூலம் அறிய நேரிடுகிறது' எனக் குமுறுகின்றனர் தமிழ் ஆர்வலர்கள். 

சஞ்சய் தத் எழுதிய கடிதம்

உலகையே உலுக்கிய 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பில் நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். 257 நபர்கள் மரணம் 2000-த்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடையவும் காரணமாக இருந்த சம்பவம் இது. தடா சிறப்பு நீதிமன்றத்தில் ஆயுதச் சட்டத்தின்படி 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார் சஞ்சய் தத். பின்னர், உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் கருணை அடிப்படையில் குறைந்தபட்ச தண்டனையான 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. தடா சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டு, மத்திய புலனாய்வு துறையான சி.பி.ஐ-யால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் நீதிமன்றத்தால் 5 ஆண்டுகளாகத் தண்டனைக் குறைப்பு பெற்ற சஞ்சய் தத், மேலும் தண்டனைக் கழிவு வழங்கப்பட்டு கடந்த 25.02.2016 அன்று மகாராஷ்ட்ர மாநில எரவாடா சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார். `தடா, ஆயுதச்சட்டம் போன்ற மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட சட்டங்களின் கீழ் தண்டனை பெற்ற கைதிகளுக்கு மத்திய அரசு மட்டுமே தண்டனைக் கழிவு வழங்க முடியும்' என 02.12.2015 அன்று உச்ச நீதிமன்றத்தின் ஐந்து பேர் அடங்கிய அரசியல் அமர்வு தீர்ப்பு வழங்கிய நிலையில் சஞ்சய் தத் மாநில அரசால் முன்விடுதலை செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை எழுப்பியது. 

சஞ்சய் தத்

இந்த நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையில், அரசியல் சாசன சட்டப்பிரிவு 161-ன்படி தமிழக அரசின் அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். நடிகர் சஞ்சய் தத் முன்விடுதலை குறித்த ஆவணங்கள் வெளியாவது அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. `சஞ்சய் தத் குறித்த விடுதலை தொடர்பான ஆவணங்கள் வெளியாகும்பட்சத்தில் மத்திய பா.ஜ.க அரசின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டுவிடும்' என்ற காரணத்தால்தான் தொடர்ந்து இதுகுறித்த தகவல் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், `தடா சட்டப்படி ராஜீவ் கொலை வழக்கு குற்றமாகாது' என உச்ச நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், `சி.பி.ஐ-யால் விசாரணை செய்யப்பட்டது' என்ற காரணத்தை வைத்து, `தனக்குத்தான் அதிகாரம் உண்டு' என வாதிட்ட மத்திய அரசு, நடிகர் சஞ்சய் தத் முன்விடுதலை குறித்துக் கேள்வி எழுப்பவில்லை. 

பேரறிவாளன்

இதுகுறித்து கடந்த 24.03.2016 அன்று 5 கேள்விகளை உள்ளடக்கி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எரவாடா சிறைக்குப் பேரறிவாளன் விண்ணப்பம் ஒன்றை அனுப்பினார். தகவல் அலுவலர் தகவல் தர மறுத்த நிலையில், 04.05.2016 அன்று பேரறிவாளன் துறைரீதியான முதல் மேல்முறையீடு செய்தார். இதனிடையே தகவல் அலுவலர் 17.05.2016 தேதியிட்டு பேரறிவாளனுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், `பேரறிவாளன் கேட்ட கேள்விகள் மூன்றாம் நபர் தொடர்பானது என்பதால் தர முடியாது' என மறுத்திருந்தார். மீண்டும், இதுகுறித்து மேல்முறையீட்டு அலுவலரிடம் 02.06.2016 அன்று பேரறிவாளன் தனது நியாயங்களை எடுத்து வைத்தார். அதைத் தொடர்ந்து பேரறிவாளன் சார்பில் வழக்குறைஞர் நிலேஷ் உகே மேல் முறையீட்டு அலுவலர் முன்பு நேரில் ஆஜராகி கருத்துகளை எடுத்து வைத்தார்.

குடும்பத்தினருடன் சஞ்சய் தத்

இருப்பினும் தகவல்களைத் தர மறுத்து 19.06.2016 அன்று மேல் முறையீட்டு அலுவலர் கடிதம் எழுதினார். இந்த நிலையில், பேரறிவாளன் மகாராஷ்ட்ரா மாநிலத் தகவல் ஆணையத்தின் புனே தகவல் ஆணையம் முன்பு தாக்கல் செய்த மேல்முறையீடு இன்று விசாரணைக்கு வந்தது. சுமார் 40 நிமிடங்கள் நடந்த விசாரணையில், பேரறிவாளன் சார்பில் மராட்டிய மாநில மனித உரிமை செயற்பாட்டாளரும் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலருமான பாஸ்கர் கர்பாரி கெய்க்வாட், வழக்கறிஞர் நிலேஷ் உகே மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பாரிவேந்தன் ஆகியோர் ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி கருத்துகளை எடுத்து வைத்தனர்.

பேரறிவாளன்

இந்த விசாரணையின்போது சஞ்சய் தத் அளித்த கடிதம் ஒன்றை எரவாடா சிறை அதிகாரி சமர்ப்பித்தார். அந்தக் கடிதத்தில், `தனது தகவல்களை வழங்கக் கூடாது' என சஞ்சய் தத் குறிப்பிட்டிருந்ததை அந்த அதிகாரி சுட்டிக்காட்டி வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் நிலேஷ் உகே, `அப்படியெனில் மாநில அரசை ஒரு கைதிதான் வழிநடத்துகிறாரா?' எனக் கேள்வி எழுப்பினார். இதன் தொடர்ச்சியாகப் பேசிய வழக்கறிஞர் பாரிவேந்தன், ஆவணங்களை வழங்க வேண்டியது சட்டக் கடமை என்பதற்கு ஆதரவாக 14.08.2018 அன்று மத்திய தகவல் ஆணையம் வழங்கிய உத்தரவு உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை சுட்டிக்காட்டி வாதிட்டார். அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக்கொண்ட மாநிலத் தகவல் ஆணையர், `உத்தரவு பின்னர் வழங்கப்படும்' எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.