மாணவியைக் கொடூரமாகக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை! 4 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு | Court gave judgement in Murder case after long time

வெளியிடப்பட்ட நேரம்: 17:59 (05/12/2018)

கடைசி தொடர்பு:17:59 (05/12/2018)

மாணவியைக் கொடூரமாகக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை! 4 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு

ஒரு தலைக் காதல் விவகாரத்தில் மாணவியைக் கொடூரமாக கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவள்ளூர் நீதிமன்றம்

திருவள்ளூர் மாவட்டம், மணலி புதுநகரைச் சேர்ந்தவர் இன்பராஜ். இவரின் மகள் அனுபாரதி. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வந்தார். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள திருவழதி நாடார்விளையைச் சேர்ந்த கருவேலமுத்து என்பவரின் மகன் ஜெயராமன். இவர் வேலை செய்யாமல் இருந்து வந்த நிலையில், அனுபாரதியை ஒரு தலையாக காதலித்துள்ளார். மேலும் அனுபாரதியிடம் தன் காதலைச் சொல்லி பலமுறை தொல்லை கொடுத்து வந்துள்ளார். கடந்த 16.3.2014 அன்று ஜெயராமன், அனுபாரதியின் வீட்டுக்குச் சென்று அவரின் அம்மா கிருஷ்ணவேணியிடம் பெண் கேட்டுள்ளார். அவர், தன் மகள் படிப்பு முடிய வேண்டும். நீ வேலை வெட்டி இல்லாமல் சுற்றித்திரிந்து வருவதால் உனக்கு என் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க முடியாது' எனக் கூறிவிட்டு வெளியில் சென்றுள்ளார்.

ஜெயராமன்

திரும்பி வரும்போது வீட்டிலிருந்து மகளின் அலறல் சத்தம்கேட்டு உள்ளே சென்று பார்த்தபோது, மகள் அனுபாரதியை கத்தியால் உடல் முழுவதும் 32 இடங்களில் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார் ஜெயராமன். இதில் பலத்த காயமடைந்த அனுபாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணவேணி கொடுத்த புகாரின் பேரில் மணலி புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவமணி வழக்கு பதிவு செய்து ஜெயராமனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

ஆயுள் தண்டனை பெற்ற ஜெயராமன்

இந்த வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி பரணிதரன், இளம்பெண்ணைக் கொலைசெய்த குற்றத்துக்காக ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். இதையடுத்து ஜெயராமனை காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.