வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (05/12/2018)

கடைசி தொடர்பு:19:40 (05/12/2018)

`நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் செயல்படுங்கள்!’ - எம்.பி-க்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி

`காவிரி மேலாண்மை வாரியத்தில் நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் செயல்பட்டீர்கள். அதேபோல், மேக்கேதாட்டூ அணை விவகாரத்திலும் செயல்பட வேண்டும்’ என அ.தி.மு.க எம்.பி-க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் 11-ம் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடருக்கு முன்னதாக பல்வேறு கட்சிகளும் எம்.பி-க்களின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகின்றன. இந்தக் கூட்டத் தொடரில் பல்வேறு விவகாரங்களை எழுப்பி ஆளும் பா.ஜ.க அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க எம்.பி-க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், துணை முதல்வரும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், முதல்வரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருடன் அ.தி.மு.க எம்.பி-க்கள் கலந்துகொண்டனர். 

அ.தி.மு.க எம்.பிக்கள் கூட்டம்

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ``காவிரி மேலாண்மைவாரிய விவகாரத்தில் நாடாளுமன்றம் முடங்கியதால், நாடே திரும்பிப் பார்த்தது. அந்தவகையில், மேக்கேதாட்டூ அணை விவகாரத்திலும் செயல்பட வேண்டும். காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் நீதியைப் பெற்றுத் தந்த எம்.பி-க்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது’’ என்று பேசினார். காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறு அறிக்கையை மத்திய அரசிடம் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளது. கர்நாடக அரசின் இந்தக் கோரிக்கையை ஆய்வு செய்யப் போவதாக மத்திய அரசு கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசின் இந்தச் செயலுக்கு தமிழகத்தின் பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நாளை கூட்டப்பட்டிருக்கிறது

எடப்பாடி பழனிசாமி

கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக எம்.பி-க்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம், சபாநாயகர் இருக்கை முற்றுகை என அ.தி.மு.க எம்.பி-க்கள் போராடினர். இதனால், நாடாளுமன்ற அவைகள் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன.