வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (05/12/2018)

கடைசி தொடர்பு:20:20 (05/12/2018)

கொலை மிரட்டல் விடுத்த மூத்த நிர்வாகி - கோவை ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி!

ரஜினி மக்கள் மன்றத்தின் மூத்த நிர்வாகி கொலை மிரட்டல் விடுத்ததால், கோவை ரஜினி ரசிகர் ஒருவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

ரஜினி ரசிகர் இம்ரான்கான்

கோவை மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இம்ரான்கான். இவர் ரஜினி மக்கள் மன்றத்தின், மேட்டுப்பாளையம் பகுதி செயற்குழு உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார். இதனிடையே,  உட்கட்சி பூசலில் இவர் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த நிலையில், இம்ரான்கானுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்துள்ளது. மன்றத்திலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டிருந்த காரணத்தால் பலர் இவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. ஆனாலும், மக்கள் மன்றத்தைச் சேர்ந்த ஒரு சிலர் இம்ரான்கான் திருமண நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

இதையடுத்து, அவர்களும் தற்காலிகமாக நீக்கப்பட்டனர். இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி வெடிக்கவே, இம்ரான்கானுக்கும், கோவை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னையிலிருந்து ரஜினி மக்கள் மன்றத்தில் பவர் புல்லாக வலம் வந்து கொண்டிருக்கும், முன்னாள் அரசு அதிகாரி ஒருவர், இம்ரான்கானை தொடர்புகொண்டு தகாத வார்த்தையில் பேசியதாகக் கூறப்படுகிறது.

ரஜினி மக்கள் மன்றம்

குறிப்பாக, அவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இம்ரான்கான் குற்றம்சாட்டிவந்தார். இதில் மனம் உடைந்த இம்ரான்கான் நேற்று எலி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பின்னர், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.