உரிமம் இல்லாமல் விடுதிகள் நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை! - சென்னை ஆட்சியர் அதிரடி | Chennai Collector Ordered New Regulation for Girls Hostel

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (05/12/2018)

கடைசி தொடர்பு:20:00 (05/12/2018)

உரிமம் இல்லாமல் விடுதிகள் நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை! - சென்னை ஆட்சியர் அதிரடி

பெண்கள் விடுதி நடத்துபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பெண்கள் விடுதி


சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்களைப் பொருத்திய குற்றச்சாட்டில் சஞ்சீவ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஐ.டி. துறையில் பணியாற்றும் பெண்கள் ஆதம்பாக்கத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனர். திருச்சியைச் சேர்ந்த சஞ்சீவ் என்பவர் விடுதியை நடத்தி வந்துள்ளார். சர்வீஸ் என்ற பெயரில் குறிப்பிட்ட சில பணியாளர்கள் மட்டும் வந்து செல்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. விடுதியில் போலீஸார் நடத்திய சோதனையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராக்கள், உடைந்த கேமராக்களின் பாகங்கள் மற்றும் சில போலி அடையாள ஆவணங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். விடுதியிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். சஞ்சீவை கைது செய்துள்ள போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்

இந்த நிலையில், பெண்கள் விடுதி நடத்துபவர்களுக்குக் கட்டுப்பாடு விதித்து சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளியாகியுள்ள அறிவிப்பில்  ``விடுதிகளில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து 9444841072 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதி நடத்துவோர் மாவட்ட சமூக நல அலுவலரிடம் பதிவுச் சான்று, உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாமல் விடுதிகளை நடத்தினால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். பதிவு பெற்ற விடுதிகளின் பெயர் பட்டியல், முகவரியோடு டிசம்பர் 31-க்குள் மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமரா

2019 ஜனவரி முதல் பதிவின்றி இயங்கும் எந்த விடுதியிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தங்க வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுதியில் பணியாற்றுபவர்கள் காவல்துறையின் நன்னடத்தைச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விடுதிக் காப்பாளர்கள் மற்றும் துணைக் காப்பாளர்கள் விடுதியில் தான் தங்க வேண்டும் வெளியில் தங்கக்கூடாது. 50-க்கும் அதிகமான பெண்கள் தங்கியிருக்கும் விடுதியில் கட்டாயமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். பதிவின்றி இயங்கும் விடுதிகள் குறித்த  9444841072 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் புகார் குறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.