வெளியிடப்பட்ட நேரம்: 19:42 (05/12/2018)

கடைசி தொடர்பு:19:42 (05/12/2018)

`தமிழக அரசின் விலையில்லா சைக்கிளில் கர்நாடக அரசு முத்திரை எப்படி வந்தது?’ - நீதிமன்றம் கேள்வி

கர்நாடக அரசு முத்திரையுடன் தமிழக மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. 

விலையில்லா சைக்கிள்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமைதாங்கிய அந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். அந்த சைக்கிள்களில் கர்நாடக அரசின் முத்திரை இருந்தது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. தரமற்றவை எனக் கர்நாடக அரசு நிராகரித்த சைக்கிள்களைக் குறைந்தவிலைக்கு வாங்கி தமிழக அரசு, மாணவர்களுக்கு வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

விலையில்லா சைக்கிள்

இந்த விவகாரம் குறித்து சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். அதில், `கர்நாடக அரசு முத்திரையுடன் உள்ள சைக்கிள்கள் தரமற்றவையாக இருக்கின்றன. அவற்றின் விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். அதேபோல், வழங்கப்பட்ட சைக்கிள்களைத் திரும்பப் பெறுவதுடன், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தார். அவர், ஊடகங்களில் வெளியான செய்திகளைச் சுட்டிக்காட்டி மனுத்தாக்கல் செய்திருந்தார். 

விலையில்லா சைக்கிள்

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் ஆவணங்கள் இல்லாமல் ஊடகச் செய்திகளை மட்டுமே தாக்கல் செய்த மனுவை எப்படி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியும் எனக் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்கு, கூடுதல் ஆவணங்களுடன் மனுத்தாக்கல் செய்வதாக மனுதாரர் டிராஃபிக் ராமசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்

அதேபோல், கர்நாடக அரசு முத்திரையுடன் தமிழக மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது எப்படி என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பி நீதிபதிகள், இதைக்கூட உரிய முறையில் பார்க்கவில்லையா என்றும் நீதிபதிகள் கேட்டனர். கூடுதல் ஆவணங்களை மனுதாரர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.