வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (05/12/2018)

கடைசி தொடர்பு:21:40 (05/12/2018)

நெல்லையில் நடுரோட்டில் பற்றி எரிந்த சொகுசு கார்! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

நெல்லை சந்திப்பு பகுதியில் நடு ரோட்டில் சென்றுகொண்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் ஏற்பட இருந்த சேதம் தவிர்க்கப்பட்டது.

தீப்பற்றிய சொகுசு கார்

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியில் வசித்து வருபவர், மாரியப்பன். இவர் நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சிப் பள்ளியில் இளநிலை பயிற்றுநராகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல இன்று அவர் பள்ளிக்குச் சென்றுவிட்டு தூத்துக்குடிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். நெல்லை சந்திப்பு அண்ணாசிலை அருகே வந்து கொண்டிருந்தபோது அவரது காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வந்ததைக் கண்டுபிடித்தார். 

அந்த இடத்தில் பெட்ரோல் பல்க் இருந்த நிலையில், சமயோசிதமாகக் காரை வேகமாக ஓட்டிய அவர் சற்று தூரம் சென்றதும் சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார். அதற்குள்ளாக காரின் முன் பகுதி மட்டும் அல்லாமல், உட்புறப் பகுதியிலும் தீ வேகமாகப் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அதனால் சொகுசு கார் முழுமையாக எரிந்து சேதமடைந்தது

உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், வேகமாக தீ பரவியதால் அருகில் இருக்கும் கண் மருத்துவமனையில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு உபகரணங்களை எடுத்து வந்து தீயை அணைக்கும் முயற்சி நடந்தது. அதற்குள்ளாக அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள். எரிந்துகொண்டிருந்த தீயை முழுமையாக அணைத்தனர். 

இந்த தீ விபத்து ஏற்பட்ட இடத்தின் அருகே பெட்ரோல் பல்க் இருந்த நிலையில், காரை ஓட்டி வந்த மாரியப்பன் பெட்ரோல் நிரப்பும் இடத்தைத் தாண்டிச் சென்று நிறுத்தியதால் அந்த இடத்தில் நடக்க இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து காரணமாக நெல்லை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே, சாலையில் ஓடிக்கொண்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரியக் காரணம் என்ன என்பது குறித்து நெல்லை சந்திப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.