`சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சிறப்புச் சட்டம்!’ - மக்கள் கோரிக்கை | Special act to permanent closure of sterlite industries, people urges TN government

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (05/12/2018)

கடைசி தொடர்பு:22:00 (05/12/2018)

`சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சிறப்புச் சட்டம்!’ - மக்கள் கோரிக்கை

தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூடிட சட்டம் இயற்ற வேண்டும் என, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பினர் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு அளித்தனர்.

அமைச்சரிடம் மனு

கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்டுவதைக் கண்டித்து தமிழக சட்டமன்றம் நாளை கூடுகிறது. இதில், துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடிட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை எதிப்பு தமிழர்கள் கூட்டமைப்பினர் அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு அளித்தனர்.

 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி மவுன அஞ்சலி ஊர்வலம் அ.தி.மு.க சார்பில் இன்று  நடந்தது. ஊர்வலம் நிறைவடைந்த பின்னர், அமைச்சர் கடம்பூர் ராஜுவை, ஸ்டெர்லைட் கலவரத்தில் இறந்த ஸ்நோலினின் தாயார் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தமிழர் கூட்டமைப்பினர் சந்தித்தனர். மேகதாதுவில் அணை விவகாரம் தொடர்பாக நாளை கூடும் சட்டமன்றக் கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் சட்டம் இயற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். 

ஸ்டெர்லைட் ஆலை எதிப்பு தமிழர்கள் கூட்டமைப்பினர்

பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு தமிழர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி,  ``ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் இருந்தே தமிழக அரசின் அரசாணை வெளியீடு மட்டும் போதாது. ஆலைக்கு எதிராக சிறப்பு தீர்மானம், சிறப்பு சட்டம் இயற்றச் சொல்லி நாங்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி கொள்கை முடிவு எடுக்க அரசை வலியுறுத்தி வருகிறோம். மேகதாது அணை விவகாரம் தொடர்பாகக் கூடும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்தோம். அவர், அதற்கு உறுதியான பதில்தராமல், `முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

அமைச்சரின் உறுதியற்ற இந்தப் பதில் அதிருப்தி அளிக்கிறது. ஆலை மீண்டும் திறக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் மீண்டும் மக்கள் மத்தியில் நிலவுகிறது. மீண்டும் ஆலை திறக்கும் நிலை ஏற்பட்டால் மக்கள் எழுச்சி, புரட்சியாக மாறும். ஆலையை ஒருபோதும் திறக்க அனுமதிக்க மாட்டோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க