பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், பதிவாளர் உட்பட 18 பேருக்கு காவல்துறை சம்மன்! | Police summons 18 members including Former Vice Chancellor of Periyar University over former Registrar's suicide issue

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (05/12/2018)

கடைசி தொடர்பு:22:30 (05/12/2018)

பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், பதிவாளர் உட்பட 18 பேருக்கு காவல்துறை சம்மன்!

பெரியார்

பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளராக இருந்தவர் அங்கமுத்து. இவர் 2017-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்குக் காரணமானவர்கள் குறித்து 6 பக்க கடிதத்தில் எழுதியிருந்தார். அதைக் காவல்துறையினர் கைப்பற்றியும் நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், முன்னாள் பதிவாளர், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என 18 பேருக்கு சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பி இருப்பது பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடம் விசாரித்தபோது, ``பெரியார் பல்கலைக்கழகத்தில் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து 18.12.2017-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவர் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2012 முதல் 2015 வரை பதிவாளராக இருந்தபோது முறைகேடாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமன கோப்புகள் மறைக்கப்பட்டதாக அங்கமுத்து மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி மரணம் அடைந்தார்.

அங்கமுத்து

அதை உறுதி செய்யும் விதமாக அங்கமுத்து தன்னுடைய மரண சாசனமாக எழுதி வைத்திருந்த கடிதத்தில் தன் தற்கொலைக்கான காரணத்தையும், தற்கொலைக்குக் காரணமானவர்களாக முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன், முன்னாள் பதிவாளர் மணிவண்ணன், பதிவாளரின் நேர்முக உதவியாளர் நெல்சன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தைச் சேர்ந்த குழந்தைவேல், கண்காணிப்பாளர்கள்  ராசமாணிக்கம், ஸ்ரீதர். இவர்களுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட டீன் கிருஷ்ணகுமார் என 7 பேர் பெயர்களையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.

பெரியார் பல்கலைக்கழகம்

ஆனால், காவல்துறை கிணற்றில் போட்ட கல்லாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. அங்கமுத்து இறந்து ஒரு வருடம் நெருங்கும் நிலையில் தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன், முன்னாள் பதிவாளர் மணிவண்ணன், டீன் கிருஷ்ணகுமார், பதிவாளரின் நேர்முக உதவியாளர் நெல்சன், தேர்வு கட்டுப்பாடு அலுவலகத்தைச் சேர்ந்த குழந்தைவேல், கண்காணிப்பாளர்கள் ராசமாணிக்கம், ஸ்ரீதர் உட்பட 18 பேருக்கு சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். சம்மன் அனுப்பி இருந்தாலும் இதில் சில உயர் அதிகாரிகள் தலையீடு இருப்பதால் விசாரணை நேர்மையாக நடைபெறுவது கடினம்'' என்றார்கள்.