வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (06/12/2018)

கடைசி தொடர்பு:00:00 (06/12/2018)

மாயமான 50 செல்போன்களை மீட்ட புதுக்கோட்டை நுண்ணறிவு போலீஸார்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் காணாமல்போன  50 செல்போன்களை ஐ.எம்.இ.ஐ நம்பர் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம்  நுண்ணறிவு போலீஸார் கண்டுபிடித்து மீட்டனர்.

செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் செல்போன்கள் காணாமல் போனதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்து வந்தனர். செல்போன்கள் காணாமல்போவது குறித்த தொடர் புகார்கள் வரப்பட்ட நிலையில் காணாமல்போன செல்போன்களை, கண்டுபிடித்து மீட்கும் வகையில், மாவட்ட எஸ்.பி செல்வராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இ.எம்.இ.ஐ மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கடந்த 3 மாதங்களில் காணாமல் போன 50 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதுகுறித்து எஸ்.பி செல்வராஜ் கூறுகையில்,``பல விலை உயர்ந்த செல்போன்கள் காணாமல்போனது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரிலேயே, தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதற்காக, மாவட்டத் தனிப்பிரிவு எஸ்.ஐ கார்த்திகேயன் மேற்பார்வையில், நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் லெட்சுமி தலைமையில் எஸ்.ஐ-க்கள் முருகானந்தம், மெய்யப்பன், ஆலங்குடி காவல்நிலையத் தலைமைக் காவலர் மாரிமுத்து, காவலர் கணேசன் மற்றும் நுண்ணறிவுப் பிரிவு காவலர்கள் மங்கையர்க்கரசி, பிரபுராஜா ஆகியோர்களைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு ஐ.எம்.இ.ஐ மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருச்சி, சிவகங்கை, கோயம்புத்தூர் திருப்பூர், சென்னை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மேற்படி காணாமல்போன விலை உயர்ந்த 50 செல்போன்கள் இருப்பது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட செல்போன்கள்

காணாமல் போன செல்போன்களின் மதிப்பு  ரூ.5.2 லட்சம் வரையிலும் இருக்கும். செல்போன்களை வைத்திருந்தவர்களை எச்சரித்து, செல்போன்களைக் கண்டெடுத்தால், உடனே காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி அனுப்பினோம். உரியவர்களிடம் ஆதாரங்கள் பெற்று செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டன. இதுபோன்று செல்போன்கள் காணாமல் போனால், அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கலாம்’ என்றார். செல்போன்களை மீட்பதில் சிறப்பாகச் செயல்பட்ட  தனிப்படை போலீஸாரை  எஸ்.பி மற்றும் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினர்.