வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (06/12/2018)

கடைசி தொடர்பு:02:00 (06/12/2018)

கும்பகோணத்தில் வடமாநில பெண் பாலியல் பலாத்காரம் - நான்குபேர் கைது!

வடமாநில இளம்பெண் ஒருவர் பணி நிமித்தமாக கும்பகோணம் வந்தபோது, நள்ளிரவில் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

பலாத்காரம்

இதுகுறித்து போலீஸார் தரப்பில், ``ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 25 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவருக்கு கும்பகோணத்தில் உள்ள வங்கி ஒன்றில் வேலை கிடைத்தது. இதற்காக டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்த அந்த பெண், சென்னையிலிருந்து கும்பகோணத்துக்கு கடந்த 1-ம் இரவு திருச்செந்தூர் விரைவு ரயிலில் கும்பகோணம் வந்தார். முதன்முறையாக கும்பகோணம் வந்ததால் அந்த பெண்ணுக்கு சரியான திசைகள் தெரியவில்லை. நள்ளிரவு 11 மணிக்கு வந்த அந்த இளம்பெண் தான் ஏற்கெனவே தங்குவதற்கு திட்டமிட்ட அறைக்கு செல்வதற்கு ஆட்டோ இல்லாமல் ரயில்நிலையத்தை விட்டு காமராஜர் சாலைக்கு வந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை கையசைத்து நிறுத்தினார். ஆட்டோ ஓட்டுநரும் நிறுத்தி அந்த பெண்ணை ஏற்றிக் கொண்டார். அந்த பெண் ஆங்கிலத்தில் தான் செல்லவேண்டிய தெருவுக்கு செல்லுமாறு கூறினார். ஆட்டோ ஓட்டுநர் அதிக பணம் வசூலிக்கலாம் என கருதி அவரை செட்டிமண்டபம் பைபாஸ் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த பெண் ஆட்டோ ஓட்டுநரிடம் திசைமாறி செல்கிறீர்களா என கேட்டுவிட்டு, தன்னுடைய நண்பருக்கு போன் செய்துள்ளார். இதனால் பயந்துபோன ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை அங்கேயே இறக்கிவிட்டுவிட்டு சென்றுள்ளார். 


அதன்பிறகு அந்த பெண் தன்னுடைய டிராலி பேக்கை இழுத்துக்கொண்டு செட்டிமண்டபத்திலிருந்து சாலையிலே நடந்து வந்தபோது, அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவரிடம் லிப்ட் கேட்டுள்ளார். அந்த இளைஞரும்  அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டார். இளைஞர் பின்னால் மற்றொரு நண்பரும் சேர்ந்து வந்துள்ளனர். இருவரும் மோட்டார் சைக்கிளில் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு நாச்சியார்கோயில் பைபாஸ் ரோட்டுக்கு வலுகட்டாயமாக இழுத்துச் சென்று அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அந்த இளைஞர்கள் தன்னுடைய நண்பர்கள் இருவரை வரவழைத்து அவர்களும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த பெண் கூச்சலிட்டும் அந்த பெண்ணை அடித்து கொலை செய்வதாக மிரட்டியுள்ளனர். இதனால் அந்த பெண் பயந்து உள்ளார். இதன்பிறகு அந்த பெண்ணை நான்கு இளைஞர்களில் ஒருவர் அழைத்துக் கொண்டு நாச்சியார்கோயில் மெயின்ரோட்டுக்கு வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி அந்த பெண்ணும், இளைஞரும் ஏறிக்கொண்டனர்.  ஆட்டோவில் வரும்போது, ஆட்டோ ஓட்டுநரிடம் தான் செல்போனை மறந்து வைத்துவிட்டு வந்ததாக கூறி, ஆட்டோ ஓட்டுநரின் செல்போனை வாங்கி அதில் தன் நண்பர்களிடம் பேசி, அந்த பெண்ணை கும்பகோணத்தில் விட்டுவிட்டு வருகிறேன், நீங்கள் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு பஸ்டாண்டுக்கு வந்துவிடுங்கள் என கூறியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை


கும்பகோணம் பழைய மீன்மார்க்கெட் அருகே வந்தபோது ஆட்டோவிலிருந்து அந்த இளைஞர் இறங்கிகொண்டார். பின்னர் ஆட்டோ ஓட்டுநர் 60 அடி சாலையில் உள்ள விடுதி ஒன்றில் இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிட்டார். இறங்கும் போது அந்த பெண் ஆட்டோவின் பதிவு எண்ணை குறித்து வைத்துக் கொண்டார். தான் விடுதியின் அறைக்கு சென்றதும் உடல் நிலை முடியாமல் போனது. மறுநாள் தன்னுடைய தோழிகளிடம் நடந்த சம்பவத்தை கூறியதும், தகவல் பரவி  வங்கி நிர்வாகத்துக்கு சம்பவம் தெரியவந்தது. இதையடுத்து ராஜஸ்தானில் உள்ள பெற்றோருக்கும் தகவல் தெரிந்து அவர்களும் கும்பகோணம் வந்தனர்.

வங்கி நிர்வாகம் போலீஸாரிடம் இந்த சம்பவத்தை ரகசியமாக விசாரிக்குமாறு கேட்டுகொண்டதன் பேரில், அந்த இளம்பெண்ணிடம் விசாரித்தபோது, தான் குறித்து வைத்திருந்த ஆட்டோவின் பதிவு எண்ணை கூறினார். அதன்பிறகு தாராசுரத்தைச் சேர்ந்த அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரித்தபோது, தன்னிடம் செல்போனை வாங்கி ஆட்டோவில் வந்த இளைஞர் பேசியதை கூறியதும், அந்த செல்போன் யாருக்கு சென்றது என்பதை வைத்து போலீஸார் துப்பு துலங்கினர். அதில், ராஜஸ்தான் பெண்ணை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகர் சுப்பிரமணியன் மகன் தினேஷ், மோதிலால் தெரு மூர்த்தி மகன் வசந்த், மூப்பனார் நகர்   சிவாஜி மகன் புருஷோத்தமன், ஹலிமா நகர் சுந்தர்ராஜன் மகன் அன்பரசன் ஆகிய நான்குபேரும் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் நேற்று நான்கு இளைஞர்களையும் கைது செய்து அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு  354 மானபங்கம் செய்தல், 366 இளம்பெண்ணை கடத்தல், 376 பாலியல் பலாத்காரம், 506 (2) கொலைமிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார். இதற்கிடையில் கும்பகோணம் முதலாம் எண் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இன்று ஒருமணி நேரத்திற்கு மேலாக  ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், குற்றவாளிகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என போலீஸார் தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க