வெளியிடப்பட்ட நேரம்: 07:45 (06/12/2018)

கடைசி தொடர்பு:07:50 (06/12/2018)

பாபர் மசூதி இடிப்பு நினைவு தினம்... அயோத்தியில் 144 தடை உத்தரவு!

அயோத்தியில் சட்டம், ஒழுங்கை காக்கும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதி

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில,  கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி, பழைமையான பாபர் மசூதி இடித்துத் தகர்க்கப்பட்டது. இச்சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்துவருகிறது. ஆண்டுதோறும், இஸ்லாமிய அமைப்புகள் இந்நாளை துக்க நாளாகவும், கறுப்பு தினமாகவும் அனுசரித்துவருகின்றனர். பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஆதரித்து இந்து அமைப்புகளும், கண்டித்து முஸ்லிம் அமைப்புகளும் ஊர்வலம், பொதுக்கூட்டங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளன.

சில நாள்களுக்கு முன்னர், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சிவசேனா மற்றும் இந்து அமைப்புகள் சேர்ந்து தர்மசபைக் கூட்டம் நடத்தியது. அதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். அது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பாபர் மசூதி தினம் கடைப்பிடிக்கப்படுவதால், அயோத்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, அயோத்தி நகரில் எந்தவிதமான அசம்பாவித நிகழ்வும் நடந்துவிடாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளூர் போலீஸார் உட்பட, துணை ராணுவத்தினர் மற்றும் அதிரடிப் படையினர் பெருமளவில் அழைக்கப்பட்டுள்ளனர். 2,500-க்கும் மேற்பட்ட போலீஸார், அதிரடிப் படையினர் அதிகமான இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். எந்த நேரமும் அசம்பாவிதம் நடக்கலாம் என்பதால், கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடும் அனைவரும் தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அயோத்தியில் சட்டம், ஒழுங்கை காக்கும் விதமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.