வெளியிடப்பட்ட நேரம்: 08:44 (06/12/2018)

கடைசி தொடர்பு:08:44 (06/12/2018)

‘வேலூர் கலெக்டர் - எஸ்பி அலுவலகத்தில் கொசுக்கடி!’ - துப்புரவுப் பணிகள் சுணக்கம்

வேலூர் கலெக்டர் மற்றும் எஸ்பி அலுவலகங்களில் கொசுக்கடி அதிகமாக இருப்பதால், அதிகாரிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கலெக்டர் அலுவலகம்

வேலூர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் சமீபத்தில் பலர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சைபெற்றனர். குறிப்பாக, டெங்கு காய்ச்சல் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. காய்ச்சலைக் கட்டுப்படுத்த, கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகங்கள் கொசுப்புழு ஒழிப்பு, துப்புரவுப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டன.

ஆனால், வேலூர் மாநகராட்சி நிர்வாகம் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று புகார் கூறப்பட்டது. குப்பைகள் தேக்கம், கழிவுநீர் கால்வாய் தூர் வாரப்படாதது போன்றவற்றின் காரணமாக, மாநகரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், மாவட்டத்தை நிர்வகிக்கும் கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகத்திலும் துப்புரவுப் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளாமல் சுணக்கம் காட்டியதால், கொசு உற்பத்தி பெருகி, அதிகாரிகளை படாதபாடுபடுத்திவருகிறது.

குப்பைகள் தேக்கம்

தினமும் மாலை முதல் விடியற்காலை வரை கொசுக்கடியால் கலெக்டர் மற்றும் எஸ்.பி. அலுவலக அதிகாரிகள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எஸ்.பி அலுவலக வளாகத்தில் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க நெருப்பு மூட்டி, அதில் பச்சை இலைகளைப் போட்டு புகை உண்டாக்கி கொசுக்கடியில் இருந்து தப்பிக்கின்றனர் போலீஸார். எஸ்.பி அலுவலகத்திற்குள் கொசு வர்த்தி சுருள் ஏற்றி வைக்கின்றனர்.

‘‘மாவட்டத்தை நிர்வகிக்கும் தலைமை அலுவலகங்களிலேயே இந்த அவலநிலை என்றால், மாநகரப் பகுதிகள் எப்படி இருக்கும்? என்கிற கேள்வி எழுந்துள்ளது. துப்புரவுப் பணிகளை செய்வதில் சுணக்கம் காட்டும் மாநகராட்சி நிர்வாகம், ‘ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை’ எப்படி கையாளப் போகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளின் முன்வடிவத்தை மேம்போக்காகக் கையில் வைத்துக் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் செய்யும் ‘பில்டப்’ தாங்க முடியவில்லை.

கொசுக்கடி

குடிநீர் பிரச்னை போன்ற எதைப் பற்றியும் புகார் கொடுத்தால் ‘ரெஸ்பான்ஸ்’ செய்வதில்லை. இவர்களை நம்பி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை நினைத்தால் தலை சுற்றுகிறது’’ என்று வேதனைத் தெரிவிக்கின்றனர் வேலூர் மக்கள்.