வெளியிடப்பட்ட நேரம்: 10:35 (06/12/2018)

கடைசி தொடர்பு:12:30 (06/12/2018)

போராட்டத்தில் குதித்த ஸ்விக்கி பாய்ஸ்! - உணவு டெலிவரியில் சிக்கல்

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் ஸ்விக்கி டெலிவரி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உணவை நாம் தேடிச்சென்ற காலம் போய், தற்போது உணவு நம்மைத் தேடிவரும் காலம் வந்துவிட்டது. சாப்பிடும் பொருள்களை குறித்த நேரத்தில் வீடுதேடி வந்து டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஸ்விக்கி தற்போது முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில், மொத்தம் 45 நகரங்களில் 45,000 உணவகங்களுடன் இணைந்து செயல்படும் ஸ்விக்கியில், தற்போது டெலிவரி செய்யும் வேலையில் மட்டும் ஒரு லட்சம் பேர் உள்ளனர். சென்னையில், நாம் எந்தப் பகுதிக்கு எப்போது சென்றாலும், அங்கு குறைந்தது 5 ஸ்விக்கி டெலிவரி செய்பவர்களையாவது பார்த்துவிட முடியும். சென்னையில் மட்டும் குறைந்த காலத்தில் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது ஸ்விக்கி.

ஸ்விக்கி போராட்டம்

Photo : Twitter/@Deepthi77793961

 ஸ்விக்கியில் வேலை  செய்யும் டெலிவரி பாய்ஸ்கள் திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர். சம்பள உயர்வு உள்ளிட்ட சில முக்கிய கோரிகைகளை வலியுறுத்தி, சென்னையில் கடந்த இரண்டு நாள்களாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். 

போராட்டம்

ஸ்விக்கியில் வேலைசெய்பவர்களுக்குத் தாங்கள் எடுக்கும் ஆர்டர்களைப் பொறுத்தே சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சம்பளத்தை அதிகரிக்க வேண்டும், ஊக்கத் தொகையை வெளிப்படையாக மாற்றியமைக்க வேண்டும், இரவில் டெலிவரி செய்யும்போது போலீஸ் கெடுபிடிகள் அதிகம் இருப்பதாகவும், அது தொடர்பாக காவல் துறையினரிடம், ஸ்விக்கி நிர்வாகம் ஆலோசனை நடத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திவருகின்றனர். 

போராட்டம்

இதனால் சென்னை வடபழனி, மயிலாப்பூர், போரூர் போன்ற 20-க்கும் மேற்பட்ட இடங்களில் உணவு டெலிவரி செய்வதில் சிக்கல் மற்றும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தங்களின் போராட்டத்துக்கு நிர்வாகம் செவிசாய்க்கவில்லை எனில், அனைத்து ஊழியர்களும் இணைந்து சென்னையில் மிகப்பெரும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக, ஸ்விக்கி ஊழியர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.