`நெல்' ஜெயராமன் மகனின் கல்விச் செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன்! | actor sivakarthikeyan helps nel jayaraman

வெளியிடப்பட்ட நேரம்: 10:49 (06/12/2018)

கடைசி தொடர்பு:10:53 (06/12/2018)

`நெல்' ஜெயராமன் மகனின் கல்விச் செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன்!

மறைந்த விவசாயி, `நெல்' ஜெயராமனின் உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லும் செலவு மற்றும் அவரது மகனின் கல்விச் செலவை ஏற்றுள்ளார், நடிகர் சிவகார்த்திகேயன். 

பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுப்பதில் முக்கியப் பங்காற்றிவந்த ‘நெல்’ ஜெயராமன், இன்று காலை சென்னை அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார். கடந்த இரண்டு வருடங்களாகத் தோல் புற்றுநோயால் அவதிப்பட்டுவந்த இவர், சில மாதங்களுக்கு முன் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சைபெற்றுவந்தார். இயற்கை ஆர்வலர் நம்மாழ்வாரின் வழி நடந்து, இயற்கை விவசாயத்தை தமிழகத்தில் பரப்புவதில் முக்கியப் பங்கு வகித்த நெல்' ஜெயராமன், 12 ஆண்டுகள் நெல் திருவிழா நடத்தி பாரம்பர்ய நெல் ரக உற்பத்தியைப் பெருக்கிவந்தார். 

இவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதே, நடிகர்கள் சிவகார்த்திகேயன், கார்த்தி, சத்யராஜ், சூரி உள்ளிட்டோர் சந்தித்தனர். இதேபோல, தி.மு.க தலைவர் ஸ்டாலின், சீமான், திருநாவுக்கரசர், வைகோ மற்றும் தமிழக அரசு சார்பில் சில அமைச்சர்களும் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, மருத்துவமனையில் ஜெயராமன் சிகிச்சைபெற்றதற்கான செலவுகளையும் ஏற்றிருந்தார் சிவகார்த்திகேயன். இதேபோல, மேலும் சிலரும் அரசு சார்பில் உதவிகள் செய்ய இருப்பதாகக் கூறப்பட்டது. 

இதற்கிடையே, இன்று அதிகாலை 5.10 மணி அளவில் அவர் உயிர் பிரிந்தது. அவரின் பிரிவால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில், மறைந்த நெல் ஜெயராமனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துசெல்லும் செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளார். அதேபோன்று, ஜெயராமன் மகனின் கல்விச் செலவையும் சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளார். தற்போது, சென்னை தேனாம்பேட்டை ரத்னா நகர் 2-வது தெருவில், நெல் ஜெயராமனின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு, அவரது உடலுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலிசெலுத்திவருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க