சென்னை வா, சினிமாவில் முன்னேறலாம், அழைத்த சுரதா! `பராசக்தி' கருணாநிதி - ஆரூர்தாஸ் நினைவலைகள் - 7 | Suradha invited us Karunanidhi- aroordoss Memories - 7

வெளியிடப்பட்ட நேரம்: 11:38 (07/12/2018)

கடைசி தொடர்பு:11:38 (07/12/2018)

சென்னை வா, சினிமாவில் முன்னேறலாம், அழைத்த சுரதா! `பராசக்தி' கருணாநிதி - ஆரூர்தாஸ் நினைவலைகள் - 7

ஒருநாள் பேச்சுவாக்கில், ``என்னைப்போல எவனும் உவமைகூற முடியாது” என்றார் சுரதா. அவர் அவ்வாறு சொன்னது எனது இள உள்ளத்தில் `சுருக்’ என்று தைத்தது. உடனே நான் ``என்னால் முடியும். நான் கூறுவேன்” என்றேன்.

சென்னை வா, சினிமாவில் முன்னேறலாம், அழைத்த சுரதா! `பராசக்தி' கருணாநிதி - ஆரூர்தாஸ் நினைவலைகள் - 7

நான் வசனம் எழுதுவதற்கு கலைஞர் (கருணாநிதி) முன் மாதிரி என்று பார்த்தோம் அல்லவா? இந்தக் கட்டுரையில் நான் எழுதிய வசனம் என்னவென்று பார்ப்போம்...

``குடிக்க இருந்த மதுகொட்டிப் போய்விட்ட பிறகு, கோப்பையை முத்தமிட்டால் போதை ஏறிவிடுமா?”

என்னுடைய இந்த வசனத்தைக் கேட்டு, நாடகம் பார்த்தவர்கள் கைதட்டினார்கள். குறிப்பாக, அன்றைக்கு என் நாடகத்தைப் பார்க்க வந்திருந்த திராவிடக் கழகப் பிரமுகரான `தண்டவாளம்’ ரங்கராஜ் என்பவர் மேடையேறி என்னைப் பாராட்டிப் பேசினார்.

 `பராசக்தி' கருணாநிதி - ஆரூர்தாஸ்

இந்தக் கட்டுரையின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

``இந்த நாடகத்தின் வசனங்களைத் தம்பி ஜேசுதாஸ் ரொம்ப நல்லா எழுதியிருக்கான். அவனை மனமாரப் பாராட்டி வாழ்த்துறேன். தம்பி நம்ம ஊருக்குக் கிடைச்ச இன்னொரு சின்னக் கருணாநிதி!” என்றார். இதைக் கேட்டு எல்லோரும் கைதட்டித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

அவர் மெச்சிப் பாராட்டியதில் என் உச்சியும் உள்ளமும் குளிர்ந்து ஆரூரின் ஆகாய மண்டலத்தில் மிதந்த மேகங்களின்மீது நான் ஆனந்த நடைபோட்டேன்.

அன்றுமுதல் நான் ஒரு முழு வசனகர்த்தா ஆகிவிட்டதான ஓர் இன்பஉணர்வு என் இதயத்தில் பரவிப்படர்ந்தது. இத்துடன்கூட இன்னொரு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது பி.யு.சின்னப்பா மூன்று வேடங்களில் நடித்த `மங்கையர்க்கரசி’ படத்துக்கு `உவமைக் கவிஞர் ' சுரதா வசனம் எழுதி, அது வெளிவந்து வெற்றிபெற்றும்கூட, அதையடுத்து வேறு பட வாய்ப்புகள் எதுவும் இன்றி, திருவாரூருக்கு வந்து மடப்புரம் பகுதியில் குடியமர்ந்து, `மங்கையர்க்கரசி’ திரைக்கதை வசனத்தை ஓர் அச்சகத்தில் கொடுத்துப் புத்தகம் ஆக்கிக்கொண்டிருந்தார்.

அந்த அச்சகத்தின் அச்சுக்கோப்பவரும், தி.மு.க-வைச் சேர்ந்த எழுத்தாளருமான பி.வாஞ்சிலிங்கம் என்ற பி.வி.லிங்கம் என்பவர்தான் `மங்கையர்க்கரசி'யைப் புத்தகமாக்கிக் கொண்டிருந்தார். அவரை கலைஞர் அறிவார். `இதய பேரிகை’ என்ற கலைஞரின் நூலை அச்சிட்டு வெளியிட்டவர்  பி.வி.லிங்கம் ஆவார். அவர் என்மீது அன்பும், என் எழுத்துகளின் மீது பற்றும்கொண்டு, என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டி உற்சாகப்படுத்துவார். அவர் கூறிய ஒரு சிறுகருவை வைத்துத்தான் நான் `திரிசூலம்' நாடகம் எழுதினேன்.

`படித்துறை சோப்பும், பார்பர்ஷாப் சீப்பும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொடர் எழுதி, அவரிடம் கொடுத்தேன் (இப்போது சாதிப்பெயரைக் கூறுவதற்கு இருக்கும் தடை, கட்டுப்பாடு அப்போது இல்லாததால், ஓசை நயத்துக்காக `பார்பர்’ என்னும் ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தினேன்.).

கருணாநிதி

அதைப் படித்துப் பார்த்த பி.வி.லிங்கம் மிக நன்றாக இருப்பதாகவும், அதை அப்படியே ஒரு சிறு கைப் புத்தகமாக அச்சடித்துத் தருவதாகவும் கூறி, தன்னிடமே வைத்துக்கொண்டார். அதோடு, தினமும் அவரைச் சந்திக்க வரும் சுரதாவிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லியிருக்கிறார்.
சுரதா படித்துப் பார்த்துவிட்டு, ``தலைப்பே புதுமையாக இருக்கிறதே! யார் இந்த ஜேசுதாஸ்?” என்று கேட்க, பி.வி.லிங்கம் என்னைப் பற்றிக் கூறியதுடன், மறுநாள் என்னை சுரதாவுக்கு அறிமுகப்படுத்தினார். என்னைக்காட்டிலும் 11 வயது மூத்தவரான சுரதா என்னுடன் சரிசமமாக, வயது வித்தியாசம் பாராட்டாமல் அன்புடன் பழகினார். பொதுவாக, அவர் சற்று முரட்டுத்தனமாகப் பேசுகிறவர் என்பதை நான் புரிந்துகொண்டேன்.

ஒருநாள் பேச்சுவாக்கில், ``என்னைப்போல எவனும் உவமைகூற முடியாது” என்றார் சுரதா. அவர் அவ்வாறு சொன்னது எனது இள உள்ளத்தில் `சுருக்’ என்று தைத்தது. உடனே நான் ``என்னால் முடியும். நான் கூறுவேன்” என்றேன்.

இதைக் கேட்டுச் சற்றுத் துணுக்குற்ற சுரதா, ``கூவுகின்ற சேவலின் கழுத்தைப் போன்ற அரிவாள்மனையில் கோதை அவள் காய் நறுக்கினாள்! எங்கே, இதைப்போல நீ ஓர் உவமை சொல், பார்க்கலாம்” என்றார்.

``அந்திப் பிறைபோல அச்சத்தால் கூன் விழுந்து குந்தி இருக்காமல், தமிழர் கொள்கைக்குப் பணிபுரிவோம்!" என்றேன்.
இப்படி நான் சொன்னதைக் கேட்டதும் சுரதாவின் விழிகள் விரிந்து, முகம் மலர்ந்தது. இன்னொரு முறை சொல்லச் சொன்னார். சொன்னேன்.

``அந்திப் பிறைபோல அச்சத்தால் கூன் விழுந்து – இந்த உவமை உனக்கு எப்படித் தோன்றியது?” என்று கேட்டார்.

``நேற்று மாலை வானத்தைப் பார்த்தேன். மூன்றாம் பிறைச் சந்திரன் தெரிந்தது. அதைக் கண்டதும் என் கற்பனையில் இந்த உவமை தோன்றியது. அப்படியே அதை ஒரு கவிதை வரியாக எழுதிக் கொண்டேன்” என்றேன்.

அவர் தன் இரு கரங்களாலும் என் முகத்தைப் பற்றி இழுத்து எனது நெற்றியில் முத்தமிட்டு, ``உன் கையெழுத்து, கற்பனை எழுத்து இரண்டுமே அழகாக இருக்கின்றன. நீ ஒரு நல்ல எழுத்தாளனாக வருவாய்” என்றவர், `` `மங்கையர்க்கரசி' படம் பார்த்தாயா?” என்று கேட்டார்.

``பார்த்தேன்.”

``நான் எழுதியுள்ள வசனங்கள் உனக்குப் பிடித்திருந்ததா?”

``மிகவும் பிடித்திருந்தன.”

கருணாநிதி

``உனக்குப் பிடித்த என் வசனங்கள் எவை, சொல்ல முடியுமா?”

``சொல்கிறேன். `மங்கையர்க்கரசி! மண்ணில் விழுந்த மழைத்துளி. இல்லை, அது சிப்பியில் விழுந்து முத்தாகியது".

``நெருப்புச் சூரியன்மீது ஆணை இட்டுக் கூறுகிறேன், நான் நிரபராதி".

``நான் பாம்பாகப் பிறந்தாலும் எனக்குப் பால் ஊற்றியிருப்பார்கள்; வேம்பாகப் பிறந்தாலும் வெட்டுப்படாமல் இருப்பேன்" - இவை எல்லாம் சிறந்த வசனங்களாக எனக்குத் தோன்றின.

நான் சொன்னதைக் கேட்டுப் பூரித்துப்போன சுரதா, ``உன் வயது சிறியது. ஆனால், உன்னிடம் உள்ள தமிழ் பெரியது. ஒரு சிறந்த எழுத்தாளனால்தான் இன்னோர் எழுத்தாளனின் சிறப்பை எடுத்துக்கூற முடியும். முயன்றால், நீயும் ஒரு சிறந்த கதை வசனகர்த்தாவாக வர முடியும். உன் எழுத்துகள் பற்றி நண்பர் லிங்கம் என்னிடம் கூறினார். நான் மறுபடியும் மதராஸுக்குப் போவேன். நீ அங்கு வந்தால் உன்னை யாராவது ஒரு சினிமா கதை, வசனகர்த்தாவிடம் உதவியாளராகச் சேர்த்துவிடுகிறேன். சினிமாப் படங்களுக்கு எப்படி எழுதுவது என்ற முறையைக் கற்றுக்கொண்டு, நீ முன்னுக்கு வரலாம்.

இப்பொழுது நீ சொன்ன கவிதை வரி புதியது. இப்படியே புதிது புதிதாகச் சிந்தனை செய். புதிய கற்பனைகள் பிறக்கும். புதிய கற்பனைகள் புதிய கருத்துகளைத் தோற்றுவித்துப் புகழ் சேர்க்கும். இது பாரதிதாசன் எனக்குக் கூறிய பாடம். அதை, உனக்கு நான் கூறுகிறேன். வாழ்க!” என்று மனதார வாழ்த்தினார்.

ஆமாம், சுரதா அன்றைக்குச் சொன்னது முற்றிலும் உண்மை. இலக்கியத்தைப் பொறுத்தமட்டில், ஏற்கெனவே ஒருவர் சொல்லியிருப்பதையே நாமும் திருப்பிச் சொல்லாமல், அதை ஓர் எடுத்துக்காட்டாகக் கொண்டு, அந்த உணர்வில் புதிதாகச் சிந்தித்துப் புதிய கற்பனைகளை, கருத்துகளைக் கூற வேண்டும், எழுத வேண்டும் என்ற என்னுடைய எண்ணத்தின் பிரதிபலிப்புதான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சாவித்திரி நடித்து, நான் வசனம் எழுதிய, என்றைக்கும் பசுமையான `பாசமலர்’!

நினைவலைகள் தொடரும்...
 


டிரெண்டிங் @ விகடன்