மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனைபேர்? ஆர்.டி.ஐ. தரும் அதிர்ச்சித் தகவல் | Only a few students from government school got medical seat this year because of NEET exam!

வெளியிடப்பட்ட நேரம்: 15:46 (06/12/2018)

கடைசி தொடர்பு:15:46 (06/12/2018)

மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனைபேர்? ஆர்.டி.ஐ. தரும் அதிர்ச்சித் தகவல்

நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் அனைவரும் முன் வைக்கும் குற்றச்சாட்டு. இந்நிலையில், அதை மெய்பிக்கும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனைபேர்? ஆர்.டி.ஐ. தரும் அதிர்ச்சித் தகவல்

மிழகத்தில், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு தகர்த்து வருகிறது. அனிதா, பிரதீபா, சுபஶ்ரீ, பண்ருட்டி சீனிவாசன், திருத்துறைப்பூண்டி கிருஷ்ணசாமி என்று தொடர்ந்து உயிர்ப் பலி வாங்கி வருகிறது நீட். அரசுப் பள்ளி மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் மருத்துவப் படிப்புக்குச் செல்ல முடியாமல் நீட் தேர்வால் பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் அனைவரும் முன் வைக்கும் குற்றச்சாட்டு. இந்நிலையில், அதை மெய்ப்பிக்கும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பல அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீட் - அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு தவிடுபொடி

ம.தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன், மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்பட்ட இடங்கள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மருத்துவக் கல்வி இயக்கத்திடம் கேட்டிருந்தார். அதில், வந்த பதில்கள் யாவும் நீட் தேர்வு குறித்த அச்சத்தை மேலும் அதிகப்படுத்துகின்றன.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில், 2018-19-ம் கல்வி ஆண்டில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 4 மாணவர்களுக்குத்தான் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்தவர்களில் 3 பேருக்குத்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. தனியார் பள்ளி மாணவர்களில் 20 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. அதேநேரத்தில், சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களில் 611 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. மேலும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களின் இருப்பிடச் சான்றிதழைச் சமர்ப்பித்து, வெளிமாநிலங்களில் பள்ளிப் படிப்பை முடித்த 191 மாணவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதாக அந்தத் தகவல் மேலும் தெரிவிக்கிறது. 

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஒரே ஒரு மாணவருக்குத்தான் இடம் கிடைத்துள்ளது. அதேநேரத்தில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3 பேருக்கும், சி.பி.எஸ்.இ பள்ளிகளைச் சேர்ந்த 283 பேருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. தமிழக இருப்பிடச் சான்றிதழை சமர்ப்பித்து, வெளிமாநிலங்களில் பள்ளிப் படிப்பை முடித்த 70 பேருக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

நீட் ஆர்.டி.ஐ

மேலும், கடந்த ஆண்டுகளில் மருத்துவப் படிப்பை முடித்து, இந்த ஆண்டு அரசு மருத்துவக்கல்லூரிகளில் 1,277 பேருக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 557 பேருக்கும் இடம் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ம.தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரனிடம் பேசினோம். ``தனியார் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைத் ஈஸ்வரன்தடுக்கத்தான் நீட் தேர்வை கொண்டு வருகிறோம் என்று மத்திய அரசு சொன்னது. ஆனால், இந்த நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துக் கனவுதான் கானல் நீராகிப் போய் விட்டது. அறிவியல் பாடத்தை எடுத்துப் படித்த 3 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களிலிருந்து, 5 பேருக்குத்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது. அதேநேரத்தில், மிகவும் குறைந்தளவு மாணவர்களைக் கொண்ட சி.பி.எஸ்.இ பள்ளிகளிலிருந்து 894 பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். நமது மாநில இருப்பிடச் சான்றிதழைக் கொடுத்து மொத்தம் 283 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

குறிப்பாக, கடந்த ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, பின்னர் ஓராண்டு நீட் பயிற்சி எடுத்து 1,834 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். மொத்தமுள்ள 3,456 இடங்களில் இது 50 சதவிகிதத்துக்கும் அதிகம். நீட் தேர்வில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக, வெளிமாநிலங்களில் கோச்சிங் எடுக்கின்றனர். ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று அவசியமில்லை. அவர்கள் கோச்சிங் சென்டரில் சேர்ந்து, முழுநேரமாக நீட் தேர்வுக்குப் பயிற்சி எடுக்கின்றனர். பின்னர், நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து, இருப்பிடச் சான்றிதழைக் காண்பித்து மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடித்து விடுகின்றனர். தமிழகத்தில் முன்பெல்லாம் 99 சதவிகிதம் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்குத்தான் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்து வந்தது. ஒரு சில இடங்களிலேயே சி.பி.எஸ்.இ மாணவர்களுக்குக் கிடைக்கும்.

தற்போது கோச்சிங் சென்டர் செல்பவர்கள் மற்றும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்குத்தான் மருத்துவ சீட் என்ற நிலையை நீட் ஏற்படுத்தியுள்ளது என்பது இந்தப் புள்ளி விவரம் மூலம் நிரூபணமாகியுள்ளது. இப்படியே சென்றால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு வெளிமாநில கோச்சிங் சென்டர்களுக்குச் செல்லவேண்டிய நிலை அதிகரிக்கும். அப்படியாகும்போது, ஏழை மாணவர்கள் இன்னும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதன்மூலம், பள்ளிக்கல்வி என்பதே பயனற்றதாக மாறிவிடும். நீட் தேர்வை ரத்து செய்வதுதான், இதற்கு ஒரே தீர்வு" என்றார் உறுதியாக.

நீட்

``தமிழக அரசின் கோச்சிங் சென்டர்கள் அனைத்தும் பெயரளவில்தான் இயங்கி வருகின்றன. தனியார் கோச்சிங் சென்டர்கள் வருடம் முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழக அரசின் கோச்சிங் சென்டர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இயங்கி வருகின்றன. அப்போதும்கூட, ஆசிரியர்கள் விருப்பமில்லாமல்தான் வகுப்பு எடுக்கின்றனர். ஆசிரியர் பற்றாக்குறையால் இதுவும், அரசுப் பள்ளிகளைப் போலத்தான் இயங்கி வருகின்றன. இதனால், மாணவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அதேநேரத்தில், இங்கிருக்கும் தனியார் பள்ளிகள் வெளிமாநிலங்களில் உள்ள கோச்சிங் சென்டர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்களை இங்கே அழைத்து வந்து கோச்சிங் கொடுக்கின்றனர். இவை அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களின் வாய்ப்பை அபகரிக்கின்றன" என்கின்றனர் இதன் உள்விவரம் அறிந்தவர்கள்.

ஒரே பாடத்திட்டத்தைக் கொண்டுவராமல், நுழைவுத் தேர்வு வைத்து அரசுப் பள்ளி மாணவர்களை ஒடுக்குவது ஜனநாயகப் படுகொலை என்றுதான் சொல்ல வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்