வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (06/12/2018)

கடைசி தொடர்பு:14:25 (06/12/2018)

`சுரேந்திரனுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?' - சபரிமலை பெண்கள் விவகாரத்தில் கேரள நீதிபதி காட்டம்

'சபரிமலை செல்லும் பெண்களின் வயதை சோதிக்க சுரேந்திரனுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது' என்று கேள்வி எழுப்பியுள்ள கேரள  உயர் நீதிமன்றம், 'சுப்ரீம் கோர்ட் விதியை அவர் மதிக்கவில்லை' எனக் கண்டித்துள்ளது.

சுரேந்திரன்

'சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு முயன்றுவருகிறது. பா.ஜ.க சபரிமலையில் ஆசாரம் காக்க வேண்டும் எனப் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறது. கடந்த மாதம்  17-ம் தேதி, சபரிமலைக்கு இருமுடி கட்டுடன் செல்ல முயன்ற கேரள பா.ஜ.க பொதுச்செயலாளர் சுரேந்திரன் கைதுசெய்யப்பட்டார். தொடர்ந்து பல வழக்குகளில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சபரிமலையில் ஆசாரம் காக்கும் போராட்டத்திற்குத் திட்டம் தீட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கேட்டு கேரள  ஹைகோர்ட்டில் சுரேந்திரன் தாக்கல்செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

சுரேந்திரன்

அப்போது, பெண்களை சபரிமலைக்குச் செல்லவிடாமல் சுரேந்திரன் போராட்டம் நடத்திய புகைப்படங்களை அரசு தரப்பு வழக்கறிஞர் ஹைகோர்ட்டில் தாக்கல்செய்தார். இதையடுத்து நீதிபதி கூறுகையில், "சபரிமலை செல்லும் பெண்களின் வயதைப் பரிசோதிக்க சுரேந்திரனுக்கு என்ன அதிகாரம் உள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அவர் மதிக்கவில்லை. போராட்டம் நடக்கும்போது சபரிமலைக்கு ஏன் சென்றார்" என்று கண்டனம் தெரிவித்தார்.

கே.சுரேந்திரன்

மேலும், அரசு தரப்பு வழக்கறிஞரைப் பார்த்து, "சுரேந்திரன் எத்தனை நாள் சிறையில் இருக்க வேண்டும். பி.ஜே.பி-யில் அவர் ஒருவர்தான் இருக்கிறாரா. அமைச்சர்கள் யார் மீதும் வழக்குகள் இல்லையா" என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதையடுத்து, சுரேந்திரனின் முன்ஜாமீன் மனுமீது நாளை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.