வெளியிடப்பட்ட நேரம்: 13:53 (06/12/2018)

கடைசி தொடர்பு:13:53 (06/12/2018)

`வீடியோவை மறந்துவிடுங்கள்; நிம்மதியாகச் செல்லுங்கள்!'- சஞ்சீவின் கேமராவில் சிக்கிய பெண்களுக்கு போலீஸ் நம்பிக்கை

விடுதியில் சஞ்சீவ் பொருத்திய கேமரா வீடியோ

ஆதம்பாக்கத்தில் பெண்கள் விடுதி நடத்திய சஞ்சீவின் ரகசிய கேமராக்களில் சிக்கிய பெண்களிடம் `வீடியோவை மறந்துவிடுங்கள்' என்று போலீஸார் கூறியுள்ளனர்.  

ஆதம்பாக்கத்தில் செயல்பட்ட பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்களை பொருத்தியதாக இன்ஜினீயர் சஞ்சீவ்வை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரை போலீஸார் பிடிக்கச் சென்றபோது அவர் தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது அவர் கீழே விழுந்து அவரின் இடது கால் முறிந்துள்ளது. காலில் கட்டுப்போட்டப்படியே சஞ்சீவ்வை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்துள்ளனர் போலீஸார். 

பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா பொருத்திய குற்றச்சாட்டில் சஞ்சீவ் சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர் குறித்த முழு விவரங்களை போலீஸார் சேகரித்துவைத்துள்ளனர். அவர் மீது நிலுவையில் என்னென்ன வழக்குகள் உள்ளன என்பதை போலீஸார் விசாரித்துவருகின்றனர். அவரின் சொந்த ஊர் திருச்சி என்பதால் அங்குள்ள போலீஸாரிடமும் சஞ்சீவ் குறித்த விவரங்களை போலீஸார் கேட்டுள்ளனர்.

ரகசிய கேமரா பொருத்தப்பட்ட பெண்கள் விடுதி அமைந்துள்ள இடம்

இந்த வழக்கை விசாரித்த போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``சம்பந்தப்பட்ட பெண்கள் விடுதியில் தங்கியிருந்த பெண்கள் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு வந்து ரகசிய கேமரா குறித்த தகவலை எங்களிடம் தெரிவித்தனர். உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு அந்த விடுதியில் சோதனை நடத்தினோம். 9 ரகசிய கேமராக்களை பறிமுதல் செய்தோம். அதில் பதிவாகியிருந்த வீடியோக்களை ஒவ்வொன்றாக ஆய்வு செய்தோம். அந்த வீடியோக்களைப் பார்க்க விடுதியில் தங்கியிருந்த பெண்கள் அனுமதி கேட்டனர். உயரதிகாரிகளின் அனுமதி பெற்று வீடியோக்களை பார்க்க பெண்களை அனுமதித்தோம். அப்போது, மிகுந்த பதற்றத்துடன் அவர்கள் இருந்தனர். அவர்களுக்கு பெண் போலீஸார் ஆறுதல் கூறினர். ரகசிய கேமராக்களில்இருந்த வீடியோக்களைப் பார்த்தபிறகு சம்பந்தப்பட்ட பெண்கள் நிம்மதியடைந்தனர். அந்த சமயத்தில் சில பெண்கள் அதிர்ச்சியும் ஆவேசமாகினர். அவர்களை சமாதானப்படுத்தினோம்.

வீடியோக்களைப் பார்த்தபிறகு அதில் இடம்பெற்ற காட்சிகளை அழித்துவிடுங்கள் என்று பெண்கள் கூறினர். அப்போது `இந்த வீடியோக்களை நீங்கள் மறந்துவிடுங்கள், நிம்மதியாகச் செல்லுங்கள். உங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு நாங்கள் பொறுப்பு' என்று நம்பிக்கையூட்டும் வகையில் அவர்களிடம் பேசினோம். அதை நம்பி அவர்களும் சென்றனர். இதையடுத்துதான் சம்பந்தப்பட்ட பெண்களிடம் புகாரைப் பெற்று, சஞ்சீவ்வை கைது செய்யச் சென்றோம். அவரிடம் விசாரித்தபோது பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் `நீயெல்லாம்...' என ஒருமையில் வசைப்பாடினார். அதற்கு சஞ்சீவ் எந்தவித பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். அதன்பிறகு இவனுக்குக் கொடுக்கும் தண்டனை, மற்றவர்களுக்குப் பாடமாக இருக்கவேண்டும் என்று விடுதியில் தங்கியிருந்த பெண்கள் கூறியுள்ளனர். விசாரணை முடிந்து சஞ்சீவ்வை சிறையில் அடைத்துள்ளோம்.

விடுதியில் கேமரா பொருத்திய சஞ்சீவ்

போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்ட சஞ்சீவின் தரப்பிலிருந்து யாரும் வரவில்லை. ரகசிய கேமராக்களை வாங்கிய விவரங்களை அவரிடம் விசாரித்தபோது, தலா 2,500 ரூபாய்க்கு அதை வாங்கியதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக ரகசிய கேமரா குறித்த தகவல்களை சில நாள்களாக அவர் இணையதளத்தில் தேடி விவரங்களை சேகரித்துள்ளார். அதன்பிறகுதான் ரகசிய கேமராக்களை வாங்கிப் பொருத்தியுள்ளார். நாங்கள் பறிமுதல் செய்யப்பட்ட ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்ட இடங்களில் ஆடியோ கேட்டால் மட்டுமே செயல்படத் தொடங்கும். மற்ற நேரங்களில் அவை செயல்படாது. கேமராக்களை கடந்த 10 தினங்களுக்கு முன்தான் பொருத்தியதாக சஞ்சீவ் தெரிவித்தார். அதில் சில கேமராக்களில் மெமரி கார்டுகூட இல்லை.

கேமரா பொருத்தப்பட்ட இடத்தில் சத்தம்கேட்கத் தொடங்கியவுடன் ஆட்டோ மெட்டிக்காக கேமராவில் வீடியோக்கள் ஆடியோவுடன் பதிவாகிவிடும். அதன்பிறகு அதில் உள்ள வீடியோக்களை டவுன்லோடு செய்துகொள்ளும் வசதி உள்ளது. இல்லையெனில் அந்த வீடியோக்கள் தானாகவே அழிந்து புது வீடியோக்கள் பதிவாகும் சிறப்பு அம்சம் ரகசிய கேமராவில் உள்ளது. கேமரா பொருத்தப்பட்ட சில தினங்களுக்குள் அவர் சிக்கிக் கொண்டார். இதனால்தான் விடுதியில் தங்கியிருந்த பெண்கள் தப்பிவிட்டனர். இல்லையெனில் அங்குள்ள பெண்களின் நிலைமை படுமோசமாகியிருக்கும்" என்றார். 

கேமரா பொருத்தியவிடுதி

ரகசிய கேமரா பொருத்தப்பட்ட விடுதியில் தங்கியிருந்த பெண்களின் எதிர்காலம் கருதி அவர்களின் விவரங்களை போலீஸார் வெளியில் தெரிவிக்கவில்லை. அதே சமயத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பை பெண்கள் கொடுத்துள்ளனர். குறிப்பாக சஞ்சீவ்வை தைரியமாக அவர்கள் காட்டிக் கொடுத்துள்ளனர். இதனால், தென்சென்னையில் உயர்பதவியிலிருக்கும் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர், சம்பந்தப்பட்ட பெண்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். விடுதியில் ரகசிய கேமராக்களைக் கண்டுபிடித்த நிமிடம் முதல் அவரை சிறையில் அடைக்கும் வரை சம்பந்தப்பட்ட பெண்கள் சஞ்சீவ் மீது கடும் ஆத்திரத்தில் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.