வெளியிடப்பட்ட நேரம்: 15:18 (06/12/2018)

கடைசி தொடர்பு:15:47 (07/12/2018)

2 திருமணங்கள்... மூன்று குழந்தைகள்! - அடம்பிடித்த பெண் மீது பாய்ந்த போக்ஸோ சட்டம்

போக்ஸோ சட்டத்தில் கைதான சுவேதா

சென்னையில் 17 வயது சிறுவனை அழைத்துச் சென்ற விவகாரத்தில் இரண்டு திருமணம் செய்த இளம்பெண்ணை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 

கீழ்ப்பாக்கம் லாக்நகரைச் சேர்ந்த சுவேதா (23) என்கிற வசந்தியின் பொருந்தாத காதலுக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த போலீஸாரிடம் பேசினோம். ``சுவேதா என்கிற வசந்திக்கு, ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் நடந்துள்ளன. முதல் திருமணத்தில் ஒரு குழந்தைப் பிறந்துள்ளது. அதன் பிறகு, இரண்டாவதாக முருகன் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். முருகன், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இரண்டு குழந்தைகளுடன் சுவேதா சென்னையில் வசித்துவந்தார். 

கடந்த சில மாதங்களுக்கு முன் சுவேதாவின் உறவினருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அதே வார்டில் அயனாவரத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவரின் உறவினரும் அனுமதிக்கப்பட்டிருந்தார். அடுத்தடுத்த பெட் என்பதால் சுவேதாவுடன் பிரசாத்தின் 17 வயது மகன் பேசியுள்ளார். அதன் பிறகு இருவரும் பழகியுள்ளனர். மருத்துவமனையிலிருந்து சென்ற பிறகும் இவர்களின் நட்பு தொடர்ந்துள்ளது. திருமணமானதை மறந்து பிரசாத்தின் 17 வயது மகனுடன் சுவேதா நெருங்கிப் பழகினார். இந்தநிலையில் கடந்த 27-ம் தேதி வீட்டைவிட்டு வெளியில் சென்ற பிரசாத்தின் மகன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பிரசாத்தின் குடும்பம் அவரைத் தேடியது. ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. 

இந்தத் தகவல் எங்களுக்குத் தெரியவந்ததும் விசாரணை நடத்தினோம். அப்போது வீட்டில் சுவேதாவும் இல்லை. இதனால் எங்களின் சந்தேகப் பார்வை சுவேதா மீது விழுந்தது. இருவரையும் தேடியபோது சென்னையில் அவர்கள் இருக்கும் தகவல் கிடைத்தது. உடனடியாக இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தோம். விசாரணையில், பிரசாத்தின் மகனை சுவேதா காதலிப்பது தெரியவந்தது. அவருக்கு 17 வயது என்பதால் அவர் மீது நாங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து பிரசாத்தின் மனைவி, சுவேதா மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் நாங்கள் சுவேதாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர். 

 போக்ஸோ சட்டத்தில் கைதான சுவேதா

போலீஸ் நிலையத்தில் அழைத்து வரபட்ட சுவேதாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. முதல் குழந்தை, முதல் கணவரிடம் உள்ளது. சில தினங்களுக்கு முன் பெங்களூருக்குச் சென்ற சுவேதா தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் முருகனிடம் ஒப்படைத்துள்ளார். அப்போது அவர் ஏன் என்று கேட்டதற்கு, `உங்கள்கூட வாழ எனக்குப் பிடிக்கவில்லை' என்று கூறியுள்ளார். அதன் பிறகுதான் பிரசாத்தின் 17 வயது மகனுடன் சுவேதா மாயமாகியிருக்கிறார். 27-ம் தேதி மாயமான இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் மீட்கப்பட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர். 

பிரசாத்தின் மகனுக்கு போலீஸாரும் அவரின் பெற்றோரும் புத்திமதி சொல்லியுள்ளனர். அவருக்கு 17 வயதாகுவதால் போதிய வழிகாட்டுதல் இல்லாமல் தவறான வழிக்குச் சென்றுவிட்டார் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால், அவரை பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்துள்ளனர். அதே சமயத்தில் குழந்தைகளின் எதிர்கால நலன்கருதி சுவேதாவிடம் போலீஸார் பேசியுள்ளனர். ஆனால், அவரோ, `பிரசாத்தின் மகனுடன் தன்னை வாழ அனுமதியுங்கள்' என்று அடம்பிடித்துள்ளார். இதனால்தான் போக்ஸோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்துள்ளனர் போலீஸார். 

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``போக்ஸோ சட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமி என்ற பாகுபாடு கிடையாது. 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும் ஆண், பெண் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். அந்த அடிப்படையில்தான் சுவேதா மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். சுவேதாவை பொறுத்தவரை இந்தச் சமூகம் குறித்த விழிப்பு உணர்வு சரிவர தெரியவில்லை. போதிய கல்வி அறிவும் இல்லை. இதனால்தான் விவாகரத்து பெறாமல் மனம்போல வாழ்ந்துள்ளார். தற்போது 17 வயதான சிறுவனுடன் நட்பாகப் பழகியுள்ளார். அவரின் தவறு குறித்து சுவேதாவிடம் கூறியபோது அதைப் புரிந்துக்கொள்ளவில்லை. பெற்ற குழந்தைகள் மீதுகூட அவருக்கு பாசம் இல்லை. மூன்று குழந்தைகளை பெற்ற அவர், 17 வயது சிறுவனுடன் வாழ விரும்புகிறார். இதனால்தான் அவரை கைது செய்தோம்" என்றார்.