`கால்நடைகளுக்கான இழப்பீடு வழங்க ரூ.150 கோடி நிதி கோரிக்கை!’ - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் | Minister Udumalai radhakrishnan speaks about Gaja relief works

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (06/12/2018)

கடைசி தொடர்பு:17:20 (06/12/2018)

`கால்நடைகளுக்கான இழப்பீடு வழங்க ரூ.150 கோடி நிதி கோரிக்கை!’ - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

கஜா புயல் பாதித்த பகுதிகளில் கால்நடைக்கான இழப்பீடு வழங்க மத்திய அரசிடம் தனியாக ரூ.150 கோடி நிதி கோரப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்


சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ``கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை, எளியோர்களின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காக விலையில்லா கறவைப் பசுக்கள், ஆடுகள், நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

கஜா புயல்

இந்தத் திட்டம் இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் கிடையாது; தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது. இந்த வருடத்திலிருந்து 50,000 ஆடுகள், 50,000 கோழிகள் மற்றும் 10,000 கறவை மாடுகள் என மொத்தம் 1,10,000 பேருக்கு வழங்கும் திட்டத்தைத் தொடங்க இருக்கிறோம்’’ என்றார். கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் கால்நடை தொடர்பான சேதங்களைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

கஜா புயல்


கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கி காவிரி டெல்டா மாவட்ட மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். 12 மாவட்டங்களில் 63 பேர் உயிரிழப்பு, 3.42 லட்சம் வீடுகள் சேதம் மற்றும் பல்லாயிரக்கணக்கான மரங்கள், கால்நடைகள் உயிரிழப்பு எனப் பாதிப்புகளின் ரணம் அதிகம். இந்தப் பேரிடரிலிருந்து மீண்டுவர அந்த மக்களுக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்கிறார்கள். வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களுக்கு அரசும் பொதுமக்களும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.