வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (06/12/2018)

கடைசி தொடர்பு:19:20 (06/12/2018)

சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை நாளையும் நீட்டித்திருக்க வேண்டும்! - ஸ்டாலின்

மேக்கே தாட்டூ அணை விவகாரம் தொடர்பாகக் கூட்டப்பட்ட சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கஜா புயல் பாதிப்புகள் குறித்து விவாதிப்பதற்காக நாளையும் நீட்டித்திருக்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். 

ஸ்டாலின்

மேக்கே தாட்டூவில் அணைகட்டும் கர்நாடக அரசைக் கண்டித்து இன்று கூட்டப்பட்ட தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்தத் தீர்மானம் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முழு ஆதரவோடு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், `கஜா புயல் பாதிப்புகள் குறித்து விவாதிக்கும் பொருட்டு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை நாளையும் நீட்டிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், அவரது கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை. 

ஸ்டாலின்

கூட்டம் நிறைவடைந்த பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``மேக்கே தாட்டூ அணை விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்துக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நாங்கள் ஆதரித்து நிறைவேற்றித் தந்துள்ளோம். அந்தத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசியிருக்கும் அதேநேரத்தில், நான் ஒரு கோரிக்கையை எடுத்து வைத்தேன். நியாயமாக ஆணையத்தைக் கண்டிக்கிற நேரத்தில், மத்திய அரசையும் கண்டித்து அந்தத் தீர்மானத்தில் கருத்துகள் இடம்பெற்றிருக்க வேண்டும். வேண்டுகோளாகக் கேட்கக் கூடிய வகையில்தான் அந்தத் தீர்மானம் அமைந்திருக்கிறது. ஒரு கண்டனத் தீர்மானமாக இதை நிறைவேற்றி இருந்தால், அது முழு அளவில் நிறைவடையக் கூடிய வகையில் இருக்கும் என்ற கருத்தை எடுத்துச் சொன்னேன். அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அதை நாங்கள் ஆதரித்து நிறைவேற்றித் தந்திருக்கிறோம். 

ஸ்டாலின்

அதுமட்டுமல்ல, சட்டமன்றத்தை இன்று ஒரு நாள் சிறப்புக் கூட்டமாக கூட்டிய நீங்கள், நாளையும் சிறப்புக் கூட்டத்தை நீட்டித்து சமீபத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இதனால், தங்கள் வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு முழுமையான நிவாரணம் போய்ச் சேரவில்லை. அதேபோல், மாநில அரசு கேட்கும் நிதியைக் கொடுக்கும் முயற்சியில் மத்திய அரசு இதுவரை ஈடுபடவில்லை. அதுகுறித்தும் விவாதிக்க வேண்டும். எனவே, நாளையும் இந்த அவையை நீட்டிக்க வேண்டும் என பேரவைத் தலைவருக்கு நான் ஒரு வேண்டுகோளை எடுத்து வைத்தேன். அந்த வேண்டுகோளை பேரவைத் தலைவரோ, இந்த அரசோ ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, அதை தி.மு.க சார்பில் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்’’என்றார்.