வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (06/12/2018)

கடைசி தொடர்பு:21:00 (06/12/2018)

`ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் '- கிராம மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

மேக்கே தாட்டூ அணை பிரச்னைக்காக இன்று கூடிய தமிழக சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் கிராம மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஸ்டெர்லைட் ஆலை மூடிட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு, ஆலைக்கு சீல் வைத்து மூடப்பட்டதை எதிர்த்து ஆலை தரப்பு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஆய்வுக் குழுவை நியமித்தது. இந்தக்குழு ``ஆலை மூடப்பட்டது தவறானது” என அறிக்கை சமர்ப்பித்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை பசுமைத் தீர்பாயத்தில் நாளை நடைபெற உள்ளது.

நீதிபதி தருண் அகர்வாலின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசு சட்டமன்றத்தில் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும், இந்த விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள்  மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் முதலில் துவங்கிய கிராமங்களில் ஒன்றான பண்டாரம்பட்டி கிராமத்தில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றுகூடி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ஹரிராகவன், ``தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை நடைபெற உள்ளது. தீர்ப்பு ஆலைக்கு சாதகமாக வந்தால், கிராம மக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். அதற்காக கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க இருக்கிறோம். ஆலைக்கு எதிராக எங்களின் போராட்டம் அறவழியில் தொடர்ந்து நடைபெறும். ஆலையைத் திறக்க அனுமதிக்க மாட்டோம்” என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தினால் பண்டாரம்பட்டி கிராமத்தில் போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க