களிமண் அடைத்த போலி பவர் பேங்க் விற்பனை! - கன்னியாகுமரியில் 2 பேர் கைது | Two men arrested for selling bogus Powerbank

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (06/12/2018)

கடைசி தொடர்பு:21:20 (06/12/2018)

களிமண் அடைத்த போலி பவர் பேங்க் விற்பனை! - கன்னியாகுமரியில் 2 பேர் கைது

ன்னியாகுமரிக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் களிமண் அடைக்கப்பட்ட போலி பவர் பேங்க் விற்பனை செய்த 2 பேரைப் போலீஸார் கைது செய்தனர். போலி பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சித்திக், சபீப் உல்லா

சபரிமலையில் தற்போது மண்டல பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பின்னர் அவர்கள் சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி வந்து பகவதி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விரதம் நிறைவு செய்கின்றனர். மேலும், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவிடம், திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட இடங்களுக்கும் செல்கின்றனர். சபரிமலை சீஸனை ஒட்டி கன்னியாகுமரியிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சித்திக், சபீப் உல்லா

தற்போது கன்னியாகுமரிக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கூட்டத்தைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தும் சிலர் தரம் குறைந்த மற்றும் போலியான பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா வந்த ஐயப்ப பக்தர் ஒருவர் கடையில் வாங்கிய செல் போன் சார்ஜ் செய்யப் பயன்படுத்தும் பவர் பேங்க் போலியானது என்பது அவர் குமரியைவிட்டுச் சென்ற பிறகு தெரிய வந்தது. மேலும், பவர் பேங்க் என்ற பெயரில் களிமண்ணை அடைத்து வைத்து அதில் சிறிய அளவிலான பேட்டரி வைத்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது, தான் ஏமாற்றப்பட்டதுபோல் வேறு யாரும் ஏமாற்றப்படக் கூடாது என நினைத்த அந்த ஐயப்ப பக்தர் தான் வாங்கிய பவர் பேங்க்கை உடைத்து உள்ளே இருந்த களிமண்ணை வீடியோ எடுத்து வலைதளங்களில் பரப்பினார். இந்தக் காட்சிகளைக் கண்காணித்த காவல்துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தினர்.

சித்திக், சபீப் உல்லா

மேலும், போலீஸார் நடத்திய சோதனையில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சித்திக் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த சபீப் உல்லா ஆகிய இரண்டு பேர் களிமண் அடைக்கப்பட்ட பவர்பேங்க் விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.15,000 பணம், மெமரி கார்டுகள் மற்றும் நூற்றுக்கணக்கான போலி பவர் பேங்க்குகளைப் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத் கூறுகையில், ``கன்னியாகுமரிக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் போலி பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொருள்களை வாங்குபவர்கள் கவனமாகப் பரிசோதனை செய்து வாங்க வேண்டும்" என்றார்.