வெளியிடப்பட்ட நேரம்: 20:55 (06/12/2018)

கடைசி தொடர்பு:20:55 (06/12/2018)

நாமக்கல்லில் லாரி திருடும் கும்பல் பிடிபட்டது எப்படி?

லாரியைக் கடத்தி லாரியின் என்ஜின், சேசிஸ் நம்பர் மாற்றி விற்பனை செய்யும் கும்பலை நாமக்கல்லில் போலீஸார் கைது செய்தனர்.

நாமக்கல்லில் லாரி திருடும் கும்பல் பிடிபட்டது எப்படி?

லாரியைக் கடத்தி அதன் என்ஜின், சேசிஸ் நம்பரை மாற்றி விற்பனை செய்யும் லாரிக் கடத்தல் கும்பல் ஒன்றை, நாமக்கல்லில் போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் நவம்பர் 30-ந் தேதி லாரி ஒன்றை சர்வீஸ் செய்வதற்காக நாமக்கல் அருகே காதப்பள்ளி என்ற இடத்தில் உள்ள லாரிப் பட்டறையில் கொண்டு வந்து நிறுத்தினார். அந்த லாரியில் செய்யப்பட்டிருந்த சில மாற்றங்களைக் கண்டு, அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் சந்தேகமடைந்தனர். இதையடுத்து, சர்வீஸுக்கு வந்த லாரி மற்றும் அதைக் கொண்டுவந்தவர் பற்றி நல்லிப்பாளையம் போலீஸில் புகார் செய்தனர். கண்ணனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அது திருட்டு லாரி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து லாரி திருடும் கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைத்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவிட்டார்.

லாரிக் கடத்தல் கும்பல்

இதில், சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர், அவருடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து, கடந்த ஆகஸ்டு மாதம் கர்நாடக மாநில பதிவு கொண்ட லாரியைத் திருடிச்சென்றதும், அதற்கு போலி ஆவணம் தயார் செய்து, சிவகங்கையைச் சேர்ந்த கண்ணனுக்கு ரூ 7,75,000-க்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. 

லாரி திருடும் கும்பல்மாணிக்கம், மற்றொரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு பெருந்துறை சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதும் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாணிக்கத்தின் கூட்டாளிகள் செல்வக்குமார், சாமிதுரை, விஸ்வநாதன், சம்பத்குமார், வெள்ளியங்கிரி, குணசேகரன், கார்த்திக் ஆகிய 7 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் தனிப்படை போலீஸார் இரண்டு லாரிகளை மீட்டனர். 

இதுகுறித்து போலீஸார் தரப்பில் தெரிவித்ததாவது: ``லாரிகளைத் திருடும் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள், அதற்கு போலியான ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்வதையும், திருடப்படும் லாரியை தனியார் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து கடன் பெறுவதையும் வழக்கமாக வைத்திருந்தனர். பின்னர் அந்தப் பணத்தைப் பகிர்ந்து கொள்வார்கள். தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள இரண்டு லாரிகளின் மதிப்பு சுமார் ரூ.27 லட்சம் இருக்கும். நாமக்கல் பகுதியில் அடங்கிய வள்ளிபுரம் அருகே இந்த லாரிகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் கும்பலைச் சேர்ந்த மேலும் இரண்டு பேரைத் தேடிக்கொண்டிருக்கிறோம்" என்றனர். 

`கடந்த 2 ஆண்டாக லாரி வாங்கி, விற்கும் தொழில் செய்து வருகிறேன். அப்போது மேட்டூரைச் சேர்ந்த லாரி புரோக்கர் குணசேகரனுடன் பழக்கம் ஏற்பட்டது. எங்கள் இருவருக்கும் எடப்பாடியைச் சேர்ந்த திருட்டு லாரியை வாங்கி என்ஜின் நம்பர், சேசிஸ் நம்பரை மாற்றி விற்பனை செய்யும் மாணிக்கத்தின் அறிமுகம் கிடைத்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் போச்சம்பள்ளி விஸ்வநாதன், பூலாம்பட்டி சம்பத்குமார், எடப்பாடி வெள்ளியங்கிரி ஆகியோர் நாமக்கல்லில் ஒரு லாரியைத் திருடிவந்து, மாணிக்கத்திடம் கொடுத்தனர். பின்னர் அந்த லாரியின் பதிவு எண்ணை மாற்றி மாணிக்கத்திடமிருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கினோம். அந்த லாரியை விழுப்புரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் ரூ. 2.80 லட்சத்துக்கு விற்பனை செய்தோம்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான கார்த்திக் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ``சுரேஷ் அதை தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஹக்கீம் என்பவருக்கு ரூ.5.40 லட்சத்துக்கு விற்றுவிட்டார். அதன் பிறகு அவர், சிவகங்கையைச் சேர்ந்த கண்ணனுக்கு ரூ. 7.75 லட்சத்துக்கு அந்த லாரியை விற்பனை செய்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார். 

கைது செய்யப்பட்ட 7 பேரையும் நல்லிபாளையம் போலீஸார், நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்