வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (06/12/2018)

கடைசி தொடர்பு:20:29 (06/12/2018)

தஞ்சைப் பெரிய கோயில் வளாகத்துக்குள் பந்தல் அமைத்து யோகா நிகழ்ச்சி! - சர்ச்சையில் வாழும் கலை அமைப்பு

`வாழும் கலை’ அமைப்பைச் சேர்ந்த ஶ்ரீஶ்ரீ ரவிஷங்கர் தஞ்சாவூர் பெரிய கோயிலில் நாளையும், நாளை மறுதினமும் 2 நாள்கள் பெரிய கோயில் வளாகத்தில் தியானம் மற்றும் யோகா  நிகழ்ச்சிகள் நடத்துகிறார். இதற்காக பெரிய கோயில் உள் வளாகத்தில் தெற்கு திசையில் கோபுரத்துக்கு அருகிலேயே பிரமாண்டமாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்த நிகழ்ச்சிக்குப் பெரிய தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நிகழ்ச்சியால் கோயிலுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது எனவும் இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது எனவும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

தஞ்சை பெரிய கோயிலில் போடப்பட்டுள்ள பந்தல்கள்

மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக காட்சி தருவதோடு உலகப்புகழ் பெற்று விளங்கி வருகிறது தஞ்சாவூர் பெரிய கோயில். உலக பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வந்து செல்லும் சுற்றுலாத் தலமாக விளங்கி வருவதால், மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், கோயில் வளாகத்தில் டெல்லியில் உள்ள தொல்லியல் துறை, வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த ஶ்ரீஶ்ரீ ரவிஷங்கருக்கு யோகா நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளித்துள்ளது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை பெரிய கோயிலில் போடப்பட்டுள்ள பந்தல்கள்

இந்த அனுமதி குறித்து சமூக ஆர்வலர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ``தியானம் மற்றும் யோகா நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு டெல்லியில் உள்ள தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது. ஒரு தனியார் நிகழ்ச்சி  நடத்துவதற்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள். மேலும் 3,000 பேர் அமரக்கூடிய வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ராட்சஸ ஜெனரேட்டர்களும் கோயிலுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நபர் ஒன்றுக்கு ரூபாய் 3,000 வரை பணம் வசூல் செய்யப்படுகிறது. ஏற்கெனவே கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கொடுப்பதால் அந்தப் பணிகளும் பாதிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி நடத்துவதற்காக தமிழகத்தில் உள்ள தொல்லியல் துறை அதிகாரிகளிடமும், தமிழக அரசிடமும் எந்த அனுமதியும் பெறவில்லை.

கோயில் வளாகத்தில் ஜெனரேட்டர்கள்

பணம் வசூல் செய்து நிகழ்ச்சி நடத்துபவர்கள் வேறு ஏதேனும் இடங்களில் நடத்தலாம். பெரும் கூட்டம் கூடும் இந்த நிகழ்ச்சியால் மக்களுக்கும், கோயிலுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஏற்கெனவே வாழும் கலை அமைப்பைச் சேர்ந்தவர்கள் யமுனை நதிக்கரையில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தியபோது யமுனை நதிக்கரையை சேதப்படுத்தியதாகக் கூறி அந்த அமைப்புக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்ததாகத் தெரிகிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு பெரிய கோயிலையும், மக்களையும் காக்கும் வகையில் அதற்கு அனுமதி வழங்காமல் தடை செய்ய வேண்டும்’’ என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க