டாஸ்மாக்கைத் திறக்கக்கோரி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்! | Kovilpatti: People staged protest to open TASMAC shop

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (07/12/2018)

கடைசி தொடர்பு:00:00 (07/12/2018)

டாஸ்மாக்கைத் திறக்கக்கோரி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்!

கோவில்பட்டியில் டாஸ்மாக் கடை தொடர்ந்து இயங்கிட வேண்டும் என வலியுறுத்தி குடிமகன்கள் கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு அளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ளது இளையரசனேந்தல். இளையரசனேந்தலில் இருந்து பிள்ளையார் நத்தம் செல்லும் சாலையில் கடந்த 2 வாரங்களாக அரசு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையினால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி கடந்த 3-ம் தேதி இளையரசனேந்தலைச் சேர்ந்த ஒரு பிரிவினர், அப்பகுதியில் பள்ளிகள் அருகில் உள்ளது, பள்ளி சென்றுவிட்டு மாணவர்கள் அந்த வழியே வர வேண்டும், வெளியூரில் வேலைக்குச் செல்பவர்கள் இரவில் வரும்போது அவ்வழியேதான் வர வேண்டும் இதனால் மாணவர்கள், மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, டாஸ்மாக் கடை இயங்கக் கூடாது எனக் கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பிரிவினர் அந்த டாஸ்மாக் கடை தொடர்ந்து செயல்பட வேண்டும் எனக் கோட்டாட்சியரிடம் மனு அளித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய குடிமகன்கள், “இளையரசனேந்தலில் இருந்து பிள்ளையார் நத்தம் செல்லும் ரோட்டில் 10,067 என்ற எண் கொண்ட டாஸ்மாக் மதுபானக்கடை ஒன்னு இருக்கு. எங்க பகுதியில வேற டாஸ்மாக் கடைகள் ஏதும் கிடையாது. இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்படுவதற்கு முன்பு  கோவில்பட்டி, ஏழாயிரம்பண்ணை, திருவேங்கடம் ஆகிய ஊர்களுக்குப் போயிதான் சரக்கு வாங்கிட்டு வருவோம். இதனால எங்களுக்கு செலவு கூடுதலாக ஆனது.

அந்த ஊர்களிலிருந்து சரக்குகளை வாங்கிட்டு வரும்போது போலீஸ்காரங்க, எங்களைப் பிடிச்சுக்கிட்டு அபராதம் போடுறாங்க. இந்த ஊர்களுக்குப் போயிட்டு 100 ரூபாய்க்கு சரக்கு பாட்டில்  வாங்கிட்டு திரும்ப எங்க ஊருக்கு வரும்போது பல நூறுகளை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கடை இல்லாததைப் பயன்படுத்தி 100 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய சரக்குகளைத் திருட்டுத்தனமாகப் பதுக்கி வைத்து 160 முதல் 200 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்துட்டு வர்றாங்க.

ஊருக்கு ஒதுக்குப்புறமாகத்தான் இந்தக் கடை செயல்பட்டு வருது. இதனால மக்கள் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லை. இந்தக் கடை ஆரம்பிச்ச இரண்டு வாரங்களில் சலசலப்பும் இல்லாமதான் இருந்துச்சு. ஆனால், திருட்டுத்தனமாக மதுபானங்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வரும் கும்பல்தான் இந்த டாஸ்மாக் கடையையும் தொடர்ந்து நடத்தவிடாமல் தடுத்து நிறுத்தி அவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில், சில நபர்களை அழைத்து வந்து தேவையில்லாமல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சரக்கு வாங்குவதற்காக அடுத்தடுத்த ஊர்களுக்குப் போக முடியாது. இந்தக் கடையைத் தொடர்ந்து நடத்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என்றனர். டாஸ்மாக் கடையைத் திறக்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடிமகன்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க