அமைச்சரவை ஒப்புதல் கிடைத்த 45 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் செயல்பாட்டுக்கு வரும்! - மத்திய அரசு | Central government files reply petition in Madurai AIIMS case

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (06/12/2018)

கடைசி தொடர்பு:22:30 (06/12/2018)

அமைச்சரவை ஒப்புதல் கிடைத்த 45 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் செயல்பாட்டுக்கு வரும்! - மத்திய அரசு

மக்களின் தொடர் போராட்டங்களுக்குப் பின் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த வருடம் அறிவித்தது. ஆனால், அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் மிகவும் மந்தமாக நடந்ததால், மதுரை எய்ம்ஸ்க்காக மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. அரசிதழில் வெளியிடவில்லை என்ற புகார் கிளம்பியது. மதுரையில் எய்ம்ஸ் உறுதி ஆரம்ப கட்டப்பணிகள் நடந்து வருகிறது என்று மத்திய அரசும், மாநில அரசும் மீண்டும் உறுதி அளித்தன. 

மதுரையில் எய்ம்ஸ்

இதற்கிடையில்  மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் 'மதுரைக்கு எய்ம்ஸ் வருவது உறுதியானதா, எய்ம்ஸ் அமைப்பதற்கான அறிவிப்பை அரசிதழில் வெளியிட வேண்டும், அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், அதற்கான நிதியை ஒதுக்க வேண்டும்' என்பது போன்ற கோரிக்கையுடன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இந்த வழக்கில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதால் கடந்த மாதம் நடந்த விசாரணையில், `எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைவதில் எந்த மாற்றமும் இல்லை' என்று மத்திய அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. அப்போது, எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் எப்போது தொடங்கும், எவ்வளவு காலத்துக்குள் முடிக்கப்படும் என்பது பற்றி மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று மத்திய சுகாதாரச் செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் 'எய்ம்ஸ் அமைப்பதற்கான திட்ட வரைவு நிதிக்குழுவின் ஒப்புதல் பெற பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதன்பின் மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெறப்படும். தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் தொடங்கி 45 மாதங்களில் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும்'' என்று தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க