சொந்த ஊரில் `நெல்’ ஜெயராமனின் உடல்! - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி | ‘Nel’ Jayaraman dies in Chennai, last rites in native place Friday

வெளியிடப்பட்ட நேரம்: 22:25 (06/12/2018)

கடைசி தொடர்பு:10:07 (07/12/2018)

சொந்த ஊரில் `நெல்’ ஜெயராமனின் உடல்! - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

இயற்கை வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமனின் உடல், அவரின் சொந்த ஊரான கட்டிமேடு வந்தடைந்தது.

நெல் ஜெயராமன் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர், இயற்கை வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன். இவர், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதன்மைச் சீடராக இருந்தார். இதுவரை 174 பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டு இயற்கை விவசாயத்தை வளர்த்தவர். 

நெல் ஜெயராமன், உடல்நலக் குறைவால் இன்று காலை 5.10 மணிக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல், காலை சென்னையில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது‌. பல்வேறு கட்சியினரும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் அஞ்சலிசெலுத்தினர். பின்னர், மதியம் அவரது உடலை சென்னையிலிருந்து திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடுக்குக் கொண்டுவந்தனர். சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்ட அவருடைய உடலுக்கு, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிசெலுத்திவருகின்றனர். பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை நண்பகல் 12 மணி வரை அவரது உடல் வைக்கப்படுகிறது. பின்னர், இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று அவரின் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நெல் ஜெயராமனின் சிகிச்சை செலவுகளை ஏற்றுக்கொண்டிருந்த நடிகர் சிவகார்த்திகேயன், சொந்த ஊருக்கு அவரது உடலைக் கொண்டுவரும் செலவையும், அவர் மகனின் கல்விச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டுள்ளார். 'ஜெயராமனின் மறைவுக்கு தமிழகத்துக்கும் வேளாண்மைத் துறைக்கும் மிகப்பெரும் இழப்பு' என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார்.