’துவண்டு கிடந்தவர்களைத் திசை மாற்றிய ஐஏஎஸ் அதிகாரி’ - நெகிழ்ச்சி அடைந்த மக்கள்! | IAS Officer turn change peoples mind with his speak in Pudukkottai

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (07/12/2018)

கடைசி தொடர்பு:09:09 (07/12/2018)

’துவண்டு கிடந்தவர்களைத் திசை மாற்றிய ஐஏஎஸ் அதிகாரி’ - நெகிழ்ச்சி அடைந்த மக்கள்!

நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் ஏதேனும் துயரம் நிகழ்ந்தால், அவர்களின் மனதைத் திசை திருப்பி, இயல்பு நிலைக்குக் கொண்டு வர முயல்வதுண்டு. உண்மையான நேசிப்பும் அக்கறையும் கொண்டவர்கள் மட்டுமே இதுபோல் நடந்துகொள்வார்கள். கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆய்வுக்கு வந்த ஓர் ஐஏஎஸ் அதிகாரி, இதுபோல் நடந்துகொண்ட விதம் இப்பகுதி மக்களை நெழ்ச்சியடைய வைத்துள்ளது.

அதிகாரி

கஜா புயலில் பாதிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மேற்பார்வை அதிகாரியாக வந்த ஐஏஎஸ் அதிகாரி எம்.எஸ்.சண்முகம்,  கடந்த 10 நாள்களுக்கும் மேலாக இங்கு ஆய்வு மேற்கொண்டுவருகிறார். உடனடியாகச் சரிசெய்யப்படவேண்டிய பணிகள்குறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுவருகிறார். கல்லாக்கோட்டை, புதுவயல், குப்பக்குடி, கல்யாணபுரம், திருநாவூர், மறமடக்கி உள்ளிட்ட, இன்னும் பல்வேறு பகுதிகளுக்கு ஆய்வுக்குச் சென்ற இவர், இங்குள்ள மக்களிடம் நடந்து கொண்ட விதம் நெகிழ்ச்சியடையவைத்துள்ளது. மக்களோடு மக்களாகக் கலந்து, ‘’உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு  ஈடு செய்ய முடியாதது. அரசு நிவாரணம் உங்களுக்கு சீக்கிரம் கிடைச்சிடும். தமிழ்நாட்டு மக்களும் உங்களுக்கு துணையாக இருந்து உதவிக்கிட்டு இருக்காங்க. முடிஞ்சிபோனதையே நினைச்சி முடங்கிக் கிடக்காதீங்க. நீங்க புயல்ல பறிகொடுத்த வீடு, மரம் மட்டும் உங்கள் சொத்து இல்லை. புள்ளைங்களோட படிப்புதான் மிகப்பெரிய சொத்து. புயல்ல அடிச்சிக்கிட்டு போகாத ஒரே சொத்து கல்விதான். நீங்க பழைய நிலைமைக்குத் திரும்பி, உங்க புள்ளைங்களை ஸ்கூலுக்கு அனுப்புங்க.

ஐ.ஏ.எஸ்

நீங்க எல்லாம் உழைப்புக்குத் தயங்காதவங்க. நீங்க மனசு வச்சா, கூடிய சீக்கிரத்துலயே நல்ல நிலைமைக்கு வந்துடுவீங்க.” என பாசீட்டிவ் எண்ணங்களை விதைத்துவருகிறார். இதோடு, இங்குள்ள வீடுகளுக்குச் சென்று, ‘’டி.வி-யில என்னம்மா சிரியல் பார்ப்பீங்க” எனக் கேட்டு கலகலப்பான சூழலை உருவாக்கியுள்ளார். பள்ளி மாணவர்களிடம், ‘’நல்லா படிச்சி, எங்களை மாதிரி நீங்களும் பெரிய அதிகாரிகளாகி கார்ல வரணும்” என உற்சாகப்படுத்திவருகிறார். ‘’நீ எந்த சப்ஜெக்ட்ல அதிகமா மார்க் வாங்குவ” என ஒரு மாணவனிடம் இவர் கேட்டதும் ‘’மேக்ஸ்தான் எனக்கு நல்லா வரும் “ என்று சொன்ன அந்த மாணவனிடம் கணக்கு நோட்டை கொண்டு வரச் சொல்லி, அவனது அழகான கையெழுத்தைப் பார்த்து தனது பேனாவைப் பரிசளித்துள்ளார். அவன் வாங்க மறுத்துள்ளான். ‘’தன்மானத்தோடு இருக்குறது நல்லதுதான். ஆனா, நீ நல்லா படிக்கிறேங்கறதுனாலதான், இதை நான் உனக்கு பரிசா தர்றேன். வாங்கிக்க” என்று கொடுத்துள்ளார். புயலில் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப, இதுபோன்ற நேர்மறை வார்த்தைகளும், கலகலப்பான பேச்சும் மிகவும் அவசியம்.