வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (07/12/2018)

கடைசி தொடர்பு:09:00 (07/12/2018)

`ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன் அனுமதி வாங்குவதில் சிக்கல்" - ஆரம்பப் பள்ளி ஆசியர்கள் வேதனை!

'ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன் அனுமதி வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது' என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 ஆசிரியர் முத்து

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டி பேசும்போது, "ஆசிரியர்கள் ஒரே பதவியில் 10 ஆண்டுகள் நிறைவுசெய்தால் தேர்வு நிலை, 20 ஆண்டுகள் நிறைவு செய்தால் சிறப்பு நிலை வழங்கப்படுகிறது. அதே போல் தங்களது கல்வித் தரத்தை உயர்த்த அஞ்சல் வழியில் உயர்கல்வி பயின்றால், துறை அனுமதி பெற வேண்டும். ஏற்கெனவே உயர்கல்வி பயில முன் அனுமதி வழங்கும் அதிகாரம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் இருந்துவந்தது. இதில் பல்வேறு நிர்வாகச் சிக்கல் ஏற்பட்டதால், தமிழகம் முழுவதும் பல ஆயிரம் ஆசிரியர்கள், தாங்கள் பயின்ற உயர்கல்விக்குப் பின்னேற்பு பெற முடியாமல் இன்றளவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அவர்களுக்கு வழங்கவேண்டிய ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுகள் நிறுத்தப்பட்டுள்ளன. உயர்கல்வி பயின்றவர்களுக்குப் பின் அனுமதி வழங்க வேண்டுமென பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். இது, கல்வித்துறை செயலரின் பரிசீலனையில் உள்ளது. இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க, சில ஆண்டுகளுக்கு முன் வட்டார கல்வி அலுவலர்களே அனுமதி வழங்கலாம் என கல்வித்துறை மாற்றி உத்தரவிட்டது.
        ஆனால், 2018 மே-18ல் வெளியிடப்பட்ட அரசாணை 101-ன் மூலம், ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைத்து பணப்பலன்களை அளிப்பது தவிர்த்து, மற்ற அதிகாரங்களை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. இதனால், சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் உயர்கல்விக்கான முன் அனுமதி பெறும் ஆசிரியர்கள் பெரும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். ஒவ்வொரு மாவட்ட கல்வி அலுவலகமும் வெவ்வேறு நடைமுறைகளைப் பின்பற்றி, தேவையற்ற காரணங்களைக் கூறி ஆசிரியர்களின் கோரிக்கை விண்ணப்பங்கள் திரும்பிவிடுகின்றன. இதனால் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, தேவையற்ற கால தாமதமும் ஏற்படுகிறது. இதனால் உயர் கல்வியைத் தொடர்வதா என்ற குழப்பமும் ஏற்படுகிறது.

மேலும், ஆசிரியர்களின் பணப்பலனும் தாமதப்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே, ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை கோரும் கோப்புகள் மாதக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகிறது. இந்நிலையில், மேற்கண்ட கோப்புகளும் தாமதப்படுவதால், அலுவலகங்களில் தேவையற்ற நிர்வாகக் குழப்பம் ஏற்பட வழி ஏற்படும். எனவே, முன்னதாக வட்டார கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட தேர்வுநிலை, சிறப்புநிலை, முன் அனுமதி வழங்கும் அதிகாரங்களைத் திரும்ப வழங்க வேண்டுமென கல்வித் துறைக்கு நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். கல்வித் துறையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அரசாணை 100 மற்றும் 101 ஆகியவற்றை ரத்துசெய்வதுடன், அதிக எண்ணிக்கையுள்ள பள்ளிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைக்கொண்ட தொடக்கக்கல்வித் துறை மாவட்ட அளவிலும் தனித்துறையாகச் செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென எங்கள் அமைப்பின் சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம். ஜாக்டோ ஜியோவின் 7 அம்ச கோரிக்கைகளிலும் இவற்றை இணைத்துள்ளோம் என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க